அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் பரிசு வென்றவர், மனைவியின் தங்கையுடன் தலைமறைவு!

அதிர்ஷ்ட இலாபச் சீட்டில் கிடைத்த அதிர்ஷ்டத்தை அடுத்து தன்னுடைய மனைவியின் தங்கையுடன், முடி திருத்துனர் களவாக பறந்துவிட்ட சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.

கண்டி நகரத்தில் இருந்து சுமார் 20 கிலோமீற்றர் தூரத்திலே இருக்கும் கலஹா நகரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த நகரத்தில் சலூன் வைத்திருக்கும் சுமார் 45 வயதான முடி திருத்துனர் ஒருவர் ஒவ்வொரு நாளும் பல வகையான அதிர்ஷ்ட இலாபச் சீட்டுகளை கொள்வ​னவு செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

அவ்வாறு கொள்வனவு செய்த ஐந்து அதிர்ஷ்ட இலாபச் சீட்டுகளில் சுமார் 5 இலட்சம் ரூபாய் அதிர்ஷ்டமாக கிடைத்துள்ளது.

வெளிநபர்களின் காதுகளுக்கு இந்த செய்தி கிட்டவில்லை. எனினும், அவருடைய உறவினர்கள் வீட்டுக்குத் தேடிவந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு வாழ்த்துச் சொல்ல வந்த மனைவியின் தங்கையும், தங்கையின் இரண்டு பிள்ளைகளும் இரண்டொரு நாட்கள் அங்கேயே தங்கிவிட்டனர். மனைவியின் ஆலோசனையின் பிரகாரமே அவர்கள் அவ்வீட்டில் தங்கியுள்ளனர்.

அன்றையதினம் அதிகாலையில் எழுந்த அவ்விரு பிள்ளைகளும் தாயை தேடி அழுதுள்ளனர்.

முடித்திருத்துனரின் மனைவி, தன்னுடைய தங்கையை வீடு முழுவதும் தேடியுள்ளார் எனினும் தங்கையை காணவில்லை.

அதுதொடர்பில் தன்னுடைய கணவனிடம் தெரியப்படுத்துவதற்காக கணவனை வீட்டிலுள்ள பல அறைகளிலும் தேடியுள்ளார். கணவனையும் காணவில்லை. அதன்பின்னரே முடித்திருத்துனரின் மனைவி விளங்கிக்கொண்டுள்ளார்.

தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் அக்காவுக்கு பாரமாக்கிவிட்டே தங்கை, முடித்திருத்துனருடன் களவாக ஓடிவிட்டார் என்பதுடன், தங்கையின் கணவன் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.