ஆயுதப்படையின் நினைவாக பொப்பி மலர் தினம் ஜனாதிபதி தலைமையில் அனுஷ்டிப்பு

ஆயுதப்படையின் நினைவு தினம் – 2024 முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு அருகில் இன்று (24) முற்பகல் நடைபெற்றது.

முதலாம் உலகப் போரில் இருந்து இன்று வரை தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த சிப்பாய்களை நினைவுகூரும் முகமாக இலங்கை இரணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றோர் சங்கத்தினால் இராணுவத்தினர் ஒத்துழைப்புடன் வருடாந்தம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்யப்படுகிறது.

நிகழ்விடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இலங்கை இரணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லெப்டினன் கேணல் (ஓய்வு) அஜித் சியம்பலாபிட்டிய வரவேற்றார்.

சர்வமத வழிபாடுகளின் பின்னர் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இலங்கை இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றோர் சங்கத்தின் பிரதிநிதிகள் இராணுவ நினைவுதூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொண்தா, பாதுகாப்புப் பதவிநிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, வெளிநாட்டுத் தூதுவர்கள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை இராணுவ சேவையிலுருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள், நாட்டுக்காக உயிர் நீத்த முப்படை வீரர்களின் குடும்பங்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

The post ஆயுதப்படையின் நினைவாக பொப்பி மலர் தினம் ஜனாதிபதி தலைமையில் அனுஷ்டிப்பு appeared first on Tamilwin news.