இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த இளம் கற்பிணித்தாயும் ஒரு குழந்தையும் உயிரிழப்பு!

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும் பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (16) திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

மூதூர், இக்பால் வீதியைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத இளம் கற்பிணித்தாய் ஒருவர் நேற்று (16) மாதாந்த மகப்பேற்று பரிசோதனைக்காக திருகோணமலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஸ்கான் பரிசோதனையை மேற்கொண்டபோது ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்ததுடன் அவரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த தாய் வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டபோதிலும் வழியில் உயர் குருதி அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்துள்ளார்.

பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டபோதிலும் குறித்த தாயும் உயிரிழந்ததுடன் ஒரு குழந்தை மட்டும் காப்பாற்றப்பட்டு விசேட சிசு பராமரிப்புப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தாயின் மரணத்திற்கான முழுமையான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் உயர் குருதி அழுத்தம் காரணமாக இருக்கலாம் எனவும் தெரிய வருகின்றது.

திருகோணமலையில் மகப்பேற்று வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுவதாகவும் அண்மைக்காலமாக சிறந்த மருத்துவ ஆலோசனை கிடைக்காமையினால் சட்டரீதியான கருக்கலைப்பு, சிசுக்களின் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகமாக இடம்பெற்று வருவதாகவும் சிறந்த வைத்திய சேவையினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் பல தாய்மார்கள் கவலை வெளியிடுகின்றனர்.