உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் அமைச்சரவையின் முடிவு

– 900,000 இற்கும் அதிகமானோர் வாக்களிக்கும் உரிமை இழப்பு
– உயிரிழந்த பின் நல்லடக்கம் செய்வதா? தகனஞ் செய்வதா?
– டிஜிட்டல் ஆளடையாளட்டை தொடர்பில் சட்டமூலத் திருத்தம்

உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலின் போது வாக்களிக்கும் உரிமை மற்றும் வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கான உரிமை இழக்கப்பட்டுள்ள வாக்காளர்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதற்காக நியமனப் பத்திரங்களை மீண்டும் தாக்கல் செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

2023.03.09 அன்று நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள உள்ளூராட்சி அதிகாரபைத் தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் பிற்போடப்பட்டமையால் 2024 ஆம் ஆண்டில் மீளாய்வு செய்யப்பட்ட தேருநர் இடாப்பில் உட்சேர்க்கப்பட்டுள்ள 900,000 இற்கும் அதிகமான வாக்காளர்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கும், வேட்பாளராகப் போட்டியிடுவதற்குமான உரிமை இழக்கப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 04 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 வயது பூர்த்தியடைந்துள்ள, வாக்காளராகத் தகைமை பெற்று தமது பெயர்கள் தேருநர் இடாப்பில் உட்சேர்க்கப்பட்டுள்ள பிரஜைகளுக்கு தமது வாக்குரிமையைப் பிரயோகிப்பதற்கு இயலுமை இருப்பினும், எதிர்வரும் உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலுக்கு, 2023 ஜனவரி மாதத்தில் நியமனப் பத்திரங்கள் பெறப்பட்டுள்ளமையால், குறித்த நியமனப் பத்திரங்களின் அடிப்படையில் தேர்தலை நடாத்தும் போது, அதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு மாத்திரமே வாக்களிக்க முடியுமென்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2023 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க உள்ளுராட்சி அதிகாரசபைத் தேர்தல் (திருத்தச்) சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், உள்ளுராட்சி அதிகாரசபைகளுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நியமனப் பத்திரங்களில் 25% இடஒதுக்கீடு இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டியுள்ளது. ஆனாலும், இதுவரை 2023 ஆம் ஆண்டு நியமனப் பத்திரம் பெறப்பட்டுள்ளமையால், இளைஞர்களுக்கான 25% கட்டாய இடஒதுக்கீடு கைவிடப்பட்டுள்ளது.

• எதிர்வரும் உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலில் தேருநர் இடாப்பில் பெயர் உட்சேர்க்கப்பட்டுள்ள, ஆனாலும் வாக்களிக்க முடியாது போயுள்ள வாக்காளர்களின் வாக்குரிமையைப் பிரயோகிக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்காகவும்,

• 2024 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பில் பெயர் உட்சேர்க்கப்பட்டுள்ள இளைஞர் வாக்காளர்கள் 900,000 இற்கும் அதிகமானவர்கள் வேட்பாளர்களாப் போட்டியிடுவதற்குமான அடிப்படை உரிமை இழக்கப்படுகின்றமையால், குறித்த உரிமையைப் பாதுகாப்பதற்காகவும்,

• 2023 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகாரபை தேர்தல் (திருத்தச்) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வேட்பாளராகப் போட்டியிடும் போது இளைஞர்களுக்கான இடஒதுக்கீடு இழக்கப்படுகின்றமையால், அநீதிகளுக்குள்ளாகிய இளைஞர்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கும்,
2023 ஆம் ஆண்டில் சமரப்பிக்கப்பட்டுள்ள நியமனப் பத்திரங்களை மீளப் பெறுவதற்கும், பின்னர் 2024 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பை அடிப்படையாகக் கொண்டு உள்ளுராட்சி அதிகாரபைத் தேர்தலை நடாத்துவதற்காக மீண்டும் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்வதற்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்குத் தேவையான அதிகாரம் கிடைக்கின்ற வகையில், குறித்த ஆணைக்குழுவுடன் ஆலோசித்து, பொருத்தமான ஏற்பாடுகள் உள்ளடங்கிய உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இலங்கை அரசு மற்றும் ஒஸ்ரியா அரசுக்கிடையில் இரட்டை வரிவிதிப்பை தடுத்தல் மற்றும் அரச நிதியை தவிர்த்தல் மற்றும் புறக்கணிப்பதை தவிர்ப்பதற்கான உடன்படிக்கை

இலங்கை அரசு மற்றும் ஒஸ்றியா அரசுக்;கிடையில் வருமானத்தின் அடிப்படையிலும் மற்றும் மூலதனத்தின் அடிப்படையிலுமான வரி தொடர்பான இரட்டை வரிவிதிப்பை தடுத்தல் மற்றும் அரச நிதியை தவிர்த்தல் மற்றும் புறக்கணிப்பதை தவிர்ப்பதற்கான உடன்படிக்கை வரைவாக்கம் செய்யப்பட்டு, இருநாட்டு வரி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் பின்னர், அதிகாரிகள் மட்டத்தில் கையொப்பம் இடப்பட்;டுள்ளது. குறித்த உடன்படிக்கைக்கு இணங்க, இலங்கை அண்மையில் மேற்கொண்ட இரட்டை வரிவிதிப்பு தடுப்பு உடன்படிக்கைக்கமைய வட்டி மற்றும் அரசிறைக்கான சராசரி நிதி அளவின் 10மூ வீதத்தை விஞ்சாத அளவில் வரி அறவிடப்படும்.

குறித்த உடன்படிக்கையில் அரச மட்டங்களில் கையொப்பமிடுவதற்கும், கையொப்பமிடப்பட்டுள்ள உடன்படிக்கை மற்றும் கூட்டுப்பத்திரத்தை 2017ஆம் ஆண்டு 24ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. ரொபோ தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக 7,500 ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம்

தேசிய கல்விக் கொள்கை சட்டகத்தின் மூலம் டிஜிட்டல் நிலைமாற்றம் மிகவும் முக்கியமான கூறாக அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் அதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்துவதற்காக அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தகவல் தொழிநுட்பம், மெகாட்ரொனிக்ஸ் மற்றும் ரொபோ தொழிநுட்பம் போன்ற செய்முறை பாடநெறிகளை நடாத்துவதில் அனுபவம் வாய்ந்த நிறுவனமான Skills College of Technology (SCOT CAMPUS)நிறுவகத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய, முன்னோடிக் கருத்திட்டமொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, தகவல் தொழிநுட்பம், உயிரியல் தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்பவியல், கணிதம் உள்ளிட்ட STEAM எண்ணக்கருவிற்கமைவாக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் 7500 ஆசிரியர்களை 3 கட்டங்களின் கீழ் Skills College of
Technology (SCOT CAMPUS) நிறுவகத்தின் மூலம் பயிற்றுவிப்பதற்காக தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. வட்டியல்லாத மாணவர் கடன் திட்டத்தின் 8 ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்தல்

அரசுசாரா உயர் கல்வி நிறுவகங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்காக 2017ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள வட்டியல்லாத மாணவர் கடன் திட்டத்தின் 8 ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் குறித்த கடன்திட்டத்தின் கீழ் அந்தந்த பாடநெறிகளுக்கான அரசுசாரா உயர் கல்வி நிறுவகங்களுக்கு செலுத்தவேண்டிய கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஒருவரின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு 2023.04.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கீழ்காணும் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழுவின் விதந்துரைகளுக்கமைய வட்டியல்லாத மாணவர் கடன் திட்டத்தின் 8 ஆம் கட்டத்திலிருந்து பாடநெறிக் கட்டணத்தை திருத்தம் செய்தல்,
• ஒரு வங்கிக்கு ஏற்படும் நிதி இடரைக் குறைப்பதற்கு இயலுமாகும் வகையில் மேற்குறிப்பிட்ட உத்தேசத்திட்டத்துக்காக இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் மேலும் தேசிய சேமிப்பு வங்கியையும் இணைத்துக் கொள்ளல்,
• வட்டியல்லாத மாணவர் கடன் திட்டத்தின் வட்டிவீதம் 13%வீதத்திற்கும் குறைந்த சதவீதத்திற்கு மற்றும் 6மாத கால AWPLR+1% சதவீதத்திற்கமைய வருடாந்தம் மீளாய்வு செய்து நடைமுறைப்படுத்தல்
• மாணவர் கடன் திட்டத்தின் 8 ஆவது கட்டத்திலிருந்து ஒரு கட்டத்திற்கு 7,000 மாணவர்களை இணைத்துக் கொள்ளல்

05. இலங்கையின் மலையகப் பெருந்தோட்ட சமூகத்திற்கான பட்டயம்

மலையக பெருந்தோட்ட சமூகத்தை முழுமையாக நாட்டின் விரிவான சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்வதற்கான அரசின் அர்ப்பணிப்பை வெற்றியடையச் செய்வதற்கு இயலச் செய்யும் வகையில் அரச முயற்சிகளை வழிநடாத்துவதற்கான அடிப்படை ஆவணமான மலையகப் பெருந்தோட்ட சமூகத்திற்கான பட்டயம் வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பட்டயத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மலையகச் சமூகம் தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகின்ற சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கும், இலங்கையில் அவர்களுக்கு சமநியாயமான சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு இயலுமை கிட்டும். அதற்கமைய, இலங்கையின் மலையகப் பெருந்தோட்ட சமூகத்துக்கான பட்டயத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோசா கம்பனிக்கு சோயா போஞ்சி மற்றும் சோளம் விநியோகம்

திரிபோசா தயாரிப்புக்கு வருடாந்தம் சோளம் மற்றும் சோயா போஞ்சி போன்றவற்றின் தேவை முறையே 12,000 மெட்றிக்தொன் மற்றும் 6,000 மெட்றிக்தொன்களாகும். தற்போது நிலவுகின்ற சோளம் மற்றும் சோயா போஞ்சி பற்றாக்குறையால் திரிபோசா தயாரிப்புச் செயன்முறைக்கான வருடாந்த விநியோகத்திற்கான தேவையை உள்நாட்டில் விநியோகித்துக் கொள்ள முடியாமையால், குறித்த தேவையை வெளிநாடுகளிலிருந்து விநியோகிக்க வேண்டியுள்ளது.

அதற்கமைய, தேசிய போட்டி விலைமனுக் கோரல் முறைமைக்கமைய சோளம் மற்றும் சோயா போஞ்சியை விநியோகிப்பதற்காக விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளுக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை சமர்ப்பித்துள்ள குறைந்த விலைமனுதாரருக்கு கீழ்க்காணும் வகையில் ஒப்பந்தங்களை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• சோளம் 6,000 மெட்ரிக்தொன் விநியோகிப்பதற்கான பெறுகையை M/s KST Evergreen (PVT) Ltd இற்கு வழங்குதல்
• சோயா போஞ்சி 3,000 மெட்ரிக்தொன் விநியோகிப்பதற்கான பெறுகையை M/s SDK United Agri Ventures (PVT) Ltd இற்கு வழங்குதல்

07. வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் விமானக் குழுவினருக்கு அதிவேக செய்மதித் தொழிநுட்பத்தின் கூடிய இணையத் தொலைத் தொடர்புகளை வழங்கல்

விமானப் பயணிகளுக்கு விமானத்தில் Wi/Fi t வசதிகள் மற்றும் கைத்தொலைபேசிகளில் GSM சேவைகளைப் பயன்படுத்துவதற்கான இயலுமையை வழங்கி, வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் விமானக் கம்பனியால் இணைய வசதிகளுடன் கூடிய 13 விமானங்களில் விமானப் பணியாளர் குழுவொன்று சமகாலத்தில் இயங்கி வருகின்றது. தற்போது நிலவுகின்ற காலங்கடந்த இணைய வசதிகளால் விமானப் பயணிகளுக்கு குறைவான இணைய வேகம் காணப்படுவதால், அதிவேக இணைய வலையமைப்பு வசதியை வழங்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதியுயர் மட்டத்தில் காணப்படுகின்ற இணையத் தொடர்புகளுக்கான Ka மற்றும் Ku எனும் Band பயன்படுத்தப்படுவதுடன், நிலவுகின்ற அதியுயர் அதிர்வெண் வீச்சால்,Ka – Band மூலம் அதிக தரவுப் பரிமாற்றங்கள் வேகமாக வழங்கப்படுகின்றன. அதன்மூலம், அதிவேக இணைய அணுகலுக்கு தங்குதடையின்றிய சேவை மற்றும் தரவுகள் அதிகமாகத் தேவைப்படுகின்ற ஏனைய பணிகளுக்கு Ka – Band வலையமைப்பு மிகவும் பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, வணிக விமானங்களுக்கான உலகளாவிய ரீதியில் உள்வாங்கப்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருள் மற்றும் இணைய வசதிகளை வழங்கி Ka – Band வலையமைப்பை வழங்குகின்ற ஒரேயொரு விநியோகத்தரான Viasat நிறுவனத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவை, தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு விதந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த விதந்துரைகளுக்கமைய, வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியின் A330 – 300 வகையைச் சார்ந்த 07 விமானங்களுக்கு ஏழு (07) வருடங்களுக்கு Ka-Band அதிவேக செய்மதித் தொழிநுட்ப இணைய வசதிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை Viasat Inc இற்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. மீட்டெடுத்தல், புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கம் தொடர்பான சட்டமூலம்

மீட்டெடுத்தல், புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கம் தொடர்பாகத் தேவையான சட்ட ஏற்பாடுகளை உள்வாங்கி புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக 2023.05.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் கௌரவ ஜனாதிபதி அவர்களும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. மெகாவாற்று 1 தொடக்கம் 5 வரையான இயலளவுடன் கூடிய மொத்த இயலளவு 165 மெகாவாற்றுக்களுடன் கூடிய யுஊ நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் சூரிய மின்கலத்தொகுதி மின்னுற்பத்தி நிலையத்தை அமைத்தல்

அம்பாறை, அநுராதபுரம், அத்துருகிரிய, பெலியத்த, தெனியாய, காலி, ஹபரண, ஹொரண, கொஸ்கம், குருநாகல், மாதம்பே, மஹியங்கன, மாஹோ, மாத்தறை, மத்துகம, பன்னல, பொலன்னறுவை, திருகோணமலை, வவுணதீவு மற்றும் வெயாங்கொடை போன்ற உபமின் நிலையங்களுக்களுக்கு 165 மெகாவாற்று கருத்திட்ட அபிவிருத்திக்காக போட்டித்தன்மையான முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நிலையங்களுக்கும் விலைமனுதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் விதந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விதந்துரைகளுக்கமைய கீழ்க்காணும் விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை முன்வைத்துள்ள விலைமனுதாரர்களுக்கு குறித்த ஒப்பந்தங்களை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிலையம்இயலளவு (மெகாவாற்று)ஒப்பந்தக்காரர்
அம்பாறை உபமின் நிலையம்5Hayleys Fentons Limited
5Hayleys Fentons Limited
பெலியத்த உபமின் நிலையம்5Hayleys Fentons Limited
5Global Consumer Brands (Pvt) Ltd
ஹபரண உபமின் நிலையம்3Hayleys Fentons Limited
ஹொரண உபமின் நிலையம்5Hayleys Fentons Limited
கொஸ்கம உபமின் நிலையம்5Hayleys Fentons Limited
5Hayleys Fentons Limited
மாதம்பே உபமின் நிலையம்5Hayleys Fentons Limited
மாத்தறை உபமின் நிலையம்5Hayleys Fentons Limited
3Hayleys Fentons Limited
2Hayleys Fentons Limited
பொலன்னறுவை உபமின் நிலையம்5Hayleys Fentons Limited
2Hayleys Fentons Limited
5Hayleys Fentons Limited
5Nex-Gen Asia (Pvt) Ltd
திருகோணமலை உபமின் நிலையம்5Hayleys Fentons Limited
5Hayleys Fentons Limited
வவுணதீவு உபமின் நிலையம்3Hayleys Fentons Limited
வெயாங்கொடை உபமின் நிலையம்3Hayleys Fentons Limited
3Hayleys Fentons Limited
குருநாகல் உபமின் நிலையம்5Hayleys Electronics Limited
5Hayleys Electronics Limited
மஹியங்கன உபமின் நிலையம்5Energynet (Pvt) Limited
5Energynet (Pvt) Limited
மாஹோ உபமின் நிலையம்5Hayleys Fentons Limited
5Hayleys Fentons Limited
மத்துகம உபமின் நிலையம்3Solar Forge Siyambalanduwa (Pvt) Limited
3Energynet (Pvt) Limited
பன்னல உபமின் நிலையம்5Hayleys Fentons Limited
5Hayleys Fentons Limited

 

10 .வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் விமானக் கம்பனிக்கான விமான எரிபொருள் விநியோகத்திற்கான ஒப்பந்தம் வழங்கல்

ப்ரங்க்பேர்ட் (FRA), இன்ஜிஓன் (ICN), மெல்பேர்ன் (MEL) மற்றும் சிட்னி (ளுலுனு) போன்ற விமான நிலையங்களில் விமான எரிபொருள் விநியோகத்திற்கு தற்போது வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தம் 2024.10.31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. அதனால், இரண்டு வருடங்களுக்கு குறித்த விமான நிலையங்களில் பொருத்தமான விநியோகத்தர்களைத் தெரிவு செய்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக விமான எரிபொருள் விநியோகிக்கின்ற 08 நிறுவனங்கள் விலைமனுக்களைச் சமர்ப்பித்துள்ளன.

அதற்கமைய, தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் விமான எரிபொருள் விநியோகிக்கின்ற ஒப்பந்தங்களைக் கீழ்வரும் வகையில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையம்ஒப்பந்தக்காரர் பெயர்
ப்ரங்க்பேர்ட் (FRA)Vitol Aviation BV
இன்ஜிஓன் (ICN)World Fuel Services Trading DMCC
சிட்னி (SYD)Vitol Aviation BV
மெல்பேர்ன்  (MEL)Vitol Aviation BV

 

11. 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட நபர்கள்;, செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம்நிலை வியாபாரமாக நியமிப்பதற்கும், மற்றும் அவ்வாறு நியமிக்கப்பட்ட வியாபாரங்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள விலக்களிப்புக்கள் மற்றும் ஊக்குவிப்புக்கள் அடங்கிய கட்டளைகள் மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, குறித்த கட்டளைகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதற்கமைய, கீழ்க்காணும் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் நியமிக்கப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 53 ஆவது பிரிவின் கீழான கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• 2394/06 ஆம் இலக்க மற்றும் 2024.07.22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளை
• 2394/09 ஆம் இலக்க மற்றும் 2024.07.22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளை
• 2394/10 ஆம் இலக்க மற்றும் 2024.07.22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளை
• 2394/11 ஆம் இலக்க மற்றும் 2024.07.22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளை
• 2394/12 ஆம் இலக்க மற்றும் 2024.07.22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளை
• 2394/13 ஆம் இலக்க மற்றும் 2024.07.22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளை
• 2394/14 ஆம் இலக்க மற்றும் 2024.07.22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளை
• 2394/15 ஆம் இலக்க மற்றும் 2024.07.22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளை
• 2394/16 ஆம் இலக்க மற்றும் 2024.07.22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளை
• 2394/17 ஆம் இலக்க மற்றும் 2024.07.22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளை
• 2394/07 ஆம் இலக்க மற்றும் 2024.07.22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளை
• 2394/08 ஆம் இலக்க மற்றும் 2024.07.22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளை
• 2394/18 ஆம் இலக்க மற்றும் 2024.07.22 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள கட்டளை

12. இலங்கை வெளி விவகார அமைச்சின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் பிறேசில் பெடறேரிவ் குடியரசின் வெளிவிவகார அமைச்சின் றியோ பிறன்கோ நிறுவனத்திற்கும் இடையில் ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இராஜதந்திரிகளைப் பயிற்றுவிக்கும் போது நெருங்கிய ஒத்துழைப்புக்களை மேம்படுத்தல், அவர்களுக்கான குறுகியகால மற்றும் நடுத்தரக்கால பயிற்சி வேலைத்திட்டங்களுக்கான வசதிகளை வழங்கல், கற்கை மற்றும் ஆராய்ச்சி வேலைத்திட்டங்கள் மற்றும் தகவல் அனுபவங்களைப் பரிமாற்றிக் கொள்ளல், சர்வதேச போக்குகளுடன் தொடர்புடைய தகவல்கள் மற்றும் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொள்ளல் போன்ற பரஸ்பர ரீதியாக ஆர்வங் காட்டுகின்ற துறைகளில் ஒத்துழைப்புக்காக இலங்கை வெளி விவகார அமைச்சின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் பிறேசில் பெடறேரிவ் குடியரசின் வெளிவிவகார அமைச்சின் றியோ பிறன்கோ நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, உத்தேச ஒத்துழைப்பு உடன்படிக்கையை இருதரப்பினருக்கிடையில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. ஆட்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலத்தைப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

இலங்கையில் தனி டிஜிட்டல் ஆளடையாளக் கட்டமைப்பு வேலைச்சட்டகத்தை நடைமுறைப்படுத்தலை இலகுபடுத்துவதற்காக 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்தல் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக, சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020.11.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு, சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. நல்லடக்கம் செய்தல், தகனஞ் செய்தல் உரிமைச் சட்டம்

உயிரிழந்த பின்னர், ஒவ்வொரு நபர்களின் உடலங்களையும் அகற்றுகின்ற விதம் தொடர்பாகத் தீர்மானிக்கின்ற உரிமையை குறித்த நபருக்கே வழங்குவதற்காகவும், தனது உடலத்தை அகற்ற வேண்டிய விதம் பற்றிய விருப்பத்தைத் தெரிவிக்காதவர்கள் உயிரிழக்கின்ற போது, உயிரிழந்தவரின் அபிலாசைகள் மற்றும் மத ரீதியான, கலாசார அல்லது தனிப்பட்ட நம்பிக்கைகளைக் கருத்தில் கொண்டு உயிரிழந்தவரின்; உடலத்தை நல்லடக்கம் செய்ய வேண்டுமா அல்லது தகனஞ் செய்ய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கின்ற உரிமை அந்நபரின் நெருங்கிய உறவினருக்கு ஒப்படைக்கின்ற வகையில் ஏற்பாடுகளை வகுப்பதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. இலங்கையில் வணிக ரீதியான மீன்பிடித்தொழிலை ஊக்குவிப்பதற்கான மூலோபாயம்

இலங்கையில் மீன்பிடித்தொழிலில் அதிக விளைவுகளுடன் கூடிய மீன்பிடி மற்றும் அதன் பேண்தகு நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக கடைப்பிடிக்கவேண்டிய மூலோபாயங்கள் பற்றித் தேடி ஆராய்ந்து விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நிபுணர்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவால் “இலங்கையில் எதிர்பார்க்கப்படும் பொருளாதார நிலைமாற்றத்திற்கு ஒத்துழைப்பதற்காக பேண்தகு வகையிலும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட வணிக ரீதியான மீன்பிடித் தொழிலை ஊக்குவிப்பதற்கான மூலோபாயங்கள்” எனும் பெயரிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள மூலோபாய வேலைச்சட்டகத்துக்கு அமைய, நீலப் பொருளாதாரக் கோட்பாடுகளுக்கு இணங்க பேண்தகு தன்மையை உறுதிப்படுத்தி 2030 ஆம் ஆண்டாகும் போது வருடாந்தம் 12% சதவீதமான துறைசார் விருத்தியும் மற்றும் 600 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தையும் ஈட்டுவதற்காக முக்கிய பங்களிப்பு வழங்கும் துறையாக இலங்கையின் மீன்பிடிதொழில் துறையை நிலைமாற்றம் செய்வதற்கான மூலோபாய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கையின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மூலோபாயத்தை, இலங்கையின் மீன்பிடித் தொழில் தொடர்பான அரச மூலோபாய வேலைச்சட்டமாக ஏற்றுக்கொள்வதற்கும், முறைசார்ந்த செயற்பாட்டுத் திட்டத்திற்கமைய, குறித்த மூலோபாயத்தை அமுல்படுத்தவும் ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

The post உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் அமைச்சரவையின் முடிவு appeared first on Tamilwin news.