ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு..!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் கலிபோர்னியாவின் சான் மேடியோவில் செவ்வாய்க்கிழமை (13) அவர்களது வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆனந்த் சுஜித் ஹென்றி (42), அவரது மனைவி அலைஸ் பிரியங்கா (40) மற்றும் அவர்களது இரட்டைக் குழந்தைகளான நோவா மற்றும் நெய்தன் (4) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.

துப்பாக்கிச் சூட்டு காயம்

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் குடும்ப உறுப்பினர்கள் இருவர் உயிரிழந்ததாக சான் மேடியோ காவல்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஏனைய இரண்டு குடும்ப உறுப்பினர்களின் மரணத்திற்கு என்ன காரணம் என்று இன்னும் கண்டறியவில்லை.

பல கோணங்களில் விசாரணை

இந் நிலையில் இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம், கொலைக்கான காரணம் என பிற தரப்பினர் கூறும் விடயங்கள் குறித்தும் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.

குறித்த வீட்டில் உள்ள ஹீட்டர் அல்லது ஏர் கண்டிஷனரில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு விஷ வாயு காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், வீட்டில் உள்ள உபகரணங்கள் பழுதடைந்தது அல்லது எரிவாயு கசிவுக்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்த இந்திய குடும்பம் பற்றிய தகவல்

ஆனந்த் சுஜித் ஹென்றி மற்றும் அவரது மனைவி ஆலிஸ் ஆகியோர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர், இருவரும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

ஆலிஸ் ஒரு மூத்த ஆய்வாளர் மற்றும் ஆனந்த் ஒரு மென்பொருள் பொறியாளர். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூ ஜெர்சியில் இருந்து சான் மேடியோ கவுண்டிக்கு இடமாறினர்.

அண்டை வீட்டாரும் சக ஊழியர்களும் இறந்த தம்பதியைப் பாராட்டியதுடன், அவர்கள் கடின உழைப்பாளிகள், நட்பு மற்றும் அர்ப்பணிப்புள்ள பெற்றோர்கள் என்றும் விவரித்தனர்.

இந்திய துணைத் தூதரகத்தின் அறிவிப்பு

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்திய-அமெரிக்க சமூகத்துடன் இறந்த குடும்பத்தினருக்கு தூதரகம் மேலும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

மரணத்திற்கான காரணத்தை பொலிஸ் அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மற்றும் தடயவியல் பகுப்பாய்வு மற்றும் பிரேத பரிசோதனையின் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.

மேலும், இந்த வழக்கை தீர்க்க உதவும் எந்தவொரு தகவலையும் தெரிவிக்க மக்கள் முன்வருமாறு காவல்துறை மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்காவில் பல இந்திய வம்சாவளி மாணவர்களின் தொடர்ச்சியான மரணங்களை அடுத்து சமீபத்திய இறப்புகள் வந்துள்ளன.