கஷ்டங்களை பொறுத்திராவிடின் நாடு பங்களாதேஷ் போலாகியிருக்கும்

நெருக்கடி நிலையிலிருந்து மீள நாட்டைக் கட்டியெழுப்பும்போது மேற்கொள்ளப்பட்ட கடினமான முடிவுகளை மக்கள் பொறுத்துக் கொண்டிருக்காவிட்டால்  எமது நாடும் இன்று பங்களாதேஷாக மாறியிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு மானிய வட்டியில் வீட்டுக் கடன்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, மலையக மக்களுக்கு தோட்டக் கிராமங்களுடன்  காணி உரிமையை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சனச இயக்கத்தின் முதியோர் ஓய்வூதிய காப்புறுதி முறையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்றதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.  மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் அரச சொத்துக்களை உள்ளடக்கி புதிய முதலீட்டு நிறுவனம் ஒன்றும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் அதற்காக புதிய சட்டங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து ஸ்திரமற்ற நிலையில் இருந்த வேளையில் தான் நாட்டைப் பொறுப்பேற்று கடினமாக முடிவுகளை எடுத்து நாட்டை மீட்டதாக கூறிய ஜனாதிபதி, மக்கள் பொறுமையாக செயற்பட்டிருக்காவிட்டால் இன்று பங்களாதேஷைப்போன்று எமது நாடும் மாறியிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

1977 இல் பதவியேற்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை திறந்து விட்டது. அதன்படி,   புதிய நிறுவனங்கள் மற்றும் புதிய வணிகங்களை உருவாக்க ஒவ்வொரு குழுவும் முன்வந்தன.

அப்போது சனச இயக்கத்தை ஆரம்பிக்க  பி.ஏ.கிரிவந்தெனிய முன்வந்தார். அதன்படி, இந்தத் திட்டத்தை சட்டபூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் உற்பத்தி மற்றும் விநியோகம் பிரிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை 1962 இல் டட்லி சேனாநாயக்க மற்றும் ஜே. ஆர். ஜெயவர்தன ஆகியோரால் கொண்டு வரப்பட்டன. உரிமைகளைப் பகிர்ந்தளிப்பதற்கான முன்மொழிவாக இது அரசியலமைப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, சனச இயக்கங்கள் போன்ற அமைப்புகள் ஊக்குவிக்கப்பட்டன. இது இலங்கையின் பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாடு ஸ்திரமற்ற நிலையில் இருந்த நேரத்தில் நான் நாட்டைப் பொறுப்பேற்றேன். அன்று மக்கள் பொறுமை காக்கவில்லை என்றால் இன்று இந்த நாட்டில் பெரும் அராஜக நிலை உருவாகியிருக்கும்.

மக்கள் வீதியில் இருந்து கொண்டு  நாட்டை நிர்வகிக்க முயன்றால் இன்று பங்களாதேஷுக்கு நேர்ந்த கதி இலங்கைக்கும் ஏற்பட்டிருக்கும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் கடினமான மற்றும் பிரபலமற்ற முடிவுகளை எடுக்க நேரிட்டது. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பத்  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

வாகனம், வீடு, நவீன மின்சாதனங்கள் வாங்குவது மக்களின் கனவாக இருந்தது. நாம் கடினமான காலத்தை கடந்துவிட்டோம். பொருளாதாரம் தற்போது ஸ்திர நிலையை அடைந்துள்ளதால், மக்களின் கொள்வனவு செய்யும்  சக்தியும் அதிகரித்துள்ளது. மக்களுக்கு  காணி உரிமைவழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்நாட்டு மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.  இருபது இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் இதன் மூலம் வழங்கப்படுகின்றன.கொழும்பு நகர அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு அவர்களின் வீட்டின் உரிமைகளை  வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்தோம்.

மலையக மக்களுக்கான தோட்ட கிராமங்களை உருவாக்கி ஒரு குடும்பத்திற்கு ஏழு பேர்ச்சஸ் காணியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பொறிமுறையின் படி மக்களுக்கு “உரிமைகள்” வழங்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலகு வட்டியில் வீட்டுக்கடன் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை, ஊழியர் சேமலாப  நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றின் நிதி, பிணைமுறிப் பத்திரங்களை வாங்க பயன்படுத்தப்பட்டது. இப்போது நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின்படி அரச செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன.