புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திசாநாயக்கவின் பதவியேற்பு நிகழ்வை அடுத்து, வாக்களித்த பேருவளை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விஷேட கூட்டமொன்று பேருவளை சீனன்கோட்டை பகுதியில் (23) இரவு நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் சீனன்கோட்டை பகுதி முக்கியஸ்தர் மபாஸீன் அஸாஹிரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பேருவளை நகரசபை முன்னாள் உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட முக்கியஸ்தருமான அரூஸ் அஸாத், ரம்ஸான் சிஹாப்தீன், ஜீவன் சம்பத் மற்றும் கெனத் ஆசிரியர் உட்பட பலரும் இங்கு உரையாற்றினர்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களித்த பேருவளை வாழ் மக்களுக்கு இதன்போது நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
பேருவளை தொகுதியில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் எல்லா வேற்றுமைகளையும் மறந்து தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக எம்மோடு கைகோர்த்து செயல்பட்டனர். சிறந்த ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்காகவும், உயர்ந்த அரசியல் கலாசாரமொன்றை தோற்றுவிப்பதற்காக வேண்டி நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தியோடு கைகோர்த்தனர்.
இந்த தேர்தலில் ஒத்துழைத்ததை விட எதிர்வரும் பொதுத் தேர்தலில் பல மடங்கு ஒத்துழைப்பை நாம் மக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து தாய் நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் அணி திரள்வோம் என்றார்.