தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஜெயம் ரவி. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான ஆர்த்தியை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அயன் மற்றும் ஆரவ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த சூழலில், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த 9 ஆம் தேதி அறிவித்து அறிக்கை வெளியிட்டார். ஆனால், இந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்ட அவரது மனைவி ஆர்த்தி தனியாக ஒரு அறிக்கை வெளியிட்டார்.
இதனிடையே, நடிகர் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிசுக்கும் பழக்கம் இருப்பதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளதாக இணையத்தில் வதந்தி பரவியது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெயம் ரவி விளக்கம் அளித்தார். அதில், “பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது, பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். அவர் ஒரு சைக்காலஜிஸ்ட். மன அழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார்.” என்று கூறினார்.
இந்நிலையில், ஜெயம் ரவிக்கும் தனக்கும் உள்ள தொடர்ப்பு குறித்தும், அவருடன் எப்படி நட்பு ஏற்பட்டது என்பது குறித்தும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பான அவர் பேசுகையில், “ஜெயம் ரவிக்கும் எனக்கும் இருக்கும் நட்பு என்பது தொழில்முறை சார்ந்தது மட்டும் தான். ஜெயம் ரவி என்னுடைய நண்பர், எனது வாடிக்கையாளர் அவ்வளவு தான். அவர்கள் விவாகரத்துக்கு நான் காரணம் என சொல்கிறார்கள். அது முற்றிலும் பொய். ஜெயம் ரவி அவரது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பும் வரை அவரை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.
இது உங்க வீட்டு பிரச்சனை இல்லை, வேறொருவரின் குடும்ப பிரச்சனை. அதில் இருந்து விலகி இருங்கள். என்னை இந்த விவகாரத்தில் இழுக்காதீர்கள். எனக்கு வேலை இருக்கிறது, அதற்கு நேரம் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், தற்போது அவர் தனது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், சென்னை ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் இருந்து தனது உடைமைகளை மீட்டுத்தருமாறு ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.