தம்புள்ள-கண்டி வீதியில் விபத்து; இருவர் பலி

தம்புள்ளை – கண்டி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் 09 மாத குழந்தை காயமடைந்துள்ளது.

தம்புள்ளை – கண்டலம பகுதியிலிருந்து தம்புள்ளை – கண்டி பிரதான வீதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த பெண் ஒருவரையும் வீதியோரம் நின்றிருந்த ஆண் ஒருவரையும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியள்ளனர்.இதன்போது பெண் வைத்திருந்த 09 மாத குழந்தை தற்போது தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த ஆண் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனவும், உயிரிழந்த 43 வயதுடைய பெண் வசிக்கும் இடம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.

மேலும், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் சாரதியும் படுகாயமடைந்து பொலிஸ் காவலில் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.