தாயை பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டால் மகன் எடுத்த தவறான முடிவு!

தாயை பராமரிக்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டினால் மனமுடைந்த மகன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி மாத்தறை பிட்டபெத்தர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த அடுத்த நாளே தாயும் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 59 வயதான உவரகல ஜதுங்கே பந்துசேன என்ற ஒரு பிள்ளையின் தந்தையே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் மாத்தறை பிட்டபெத்தர பிரதேச செயலாளர் பிரிவின் கொஸ்மில்கொட பகுதியில் வசித்து வந்தார் இவர் கடந்த திங்கட்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

இறந்தவரின் மனைவி, கூறிய போது,

“பிரதேச செயலர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து மக்கள் முன்னிலையில் அவரை திட்டியுள்ளனர். அவர் வீட்டுக்கு வந்து திட்டியதாகச் கூறினார். இதனால் மன உளைச்சலுடனே காணப்பட்டார் என்றார்.

உயிரிழந்த பந்துசேனவின் தாயார் 90 வயதுடைய ஆவார்.

இவர் தனது வீட்டில் மகளுடன் வசித்து வந்துள்ளார்.

ஆனால், தனது மகள் அதாவது பந்துசேனவின் சகோதரி தாயை சித்திரவதை செய்துள்ளதால் , அவர் தாயை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொண்டார்.

‘‘கண்களால் பார்த்தோம்… மகன் தன் தாயை நன்றாக கவனித்தார்’’ என கிராம மக்கள் தெரிவித்தனர்.

எனினும், தனது தாயை பந்துசேன என்ற சகோதரன் கவனிப்பதில்லை என அவரது சகோதரி கிராம அதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து சோகமடைந்த பந்துசேன தனது மனைவியிடம் இதனைத் தெரிவித்திருந்தார்.

சம்பவத்தன்று பிற்பகல் முதல் பந்துசேன வீட்டில் இல்லாததால், உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததுடன், அவரது மருமகனும் இது தொடர்பில் முகநூல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனால், மறுநாள் காலை அவரது உடல் வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

மகனின் மரணத்தை அறிந்த தாய் மொரவக மாவட்ட வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.