தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மனு

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேசிய மக்கள் சக்தியை பதிவு செய்துள்ள முறைமை சட்டவிரோதமானது எனவும் இது தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறும் கோரி உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வினிவித பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வினிவித பெரமுனவை அரசியல் கட்சியாக பதிவு செய்வதை நிராகரித்து தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப் பேராணை மனு மீதான விசாரணையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ள வினிவித பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு, ஜே.வி.பியின் பிரிவொன்றான தேசிய மக்கள் சக்தியை அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளமை சட்டத்திற்கு முரணானது என தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 103 இன் இரண்டாம் இலக்க சரத்துக்கு அமைய, ஒரே கட்சியின் வெவ்வேறு பிரிவுகளை அரசியல் கட்சிகளாக பதிவு செய்கின்றமை சட்டவிரோதமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.