தமிழக அரசு பெண்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விடியல் திட்டத்தின் மூலம் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் மற்ற மாநிலங்களும் இந்த திட்டத்தை பின்பற்றி வருகின்றன.
இதேபோல் மகளிர் உரிமை தொகை என்கிற திட்டத்தின் மூலம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாளுக்கு நாள் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த திட்டமும் பல்வேறு மாநில அரசுகளால் பின்பற்றப்பட்டு வருகிறது.
மேலும் சமூக நலத்துறை சார்பில் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் 200 பெண்களுக்கு சுயதொழிலுக்காக 50 ஆயிரம் ரூபாய் வீதம் மானியம் வழங்கும் திட்டத்துக்கு தமிழக அரசுக்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான அரசாணையும் அண்மையில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் என வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு, நடமாடும் உணவகங்கள், பழங்கள், காய்கறிகள், சலவைகடைகள் போன்ற சுய தொழில் செய்ய 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் பயனாளிகள் சமூக நலத்துறையில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இநிநிலையில் இந்த வரிசையில் தமிழக அரசு மகளிருக்காக அறிவித்துள்ள புதிய திட்டம் தான், ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ . கடந்த நிதி மானிய கோரிக்கை அறிவிப்பின் போது இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
விவசாயத் தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை நில உடைமையாளர்களாக்கும் வகையில் இந்த திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இது மகளிரின் பெயரில் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தின் மூலம் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை பெறுவதற்கு தற்போது தகுதியான பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறும் பயனாளிகளுக்கு 18 வயது முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வருமானம் 3 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது என்றும் விண்ணப்பிக்கும் நபர் விவசாயியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக விண்ணப்பிப்பவருக்கு சொந்தமான நிலம் இருக்க கூடாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், அதிகபட்சமாக 2½ ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கி கொள்ள முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.