நிகழ்நிலைக் காப்புச்சட்டம் மீளப்பெறப்பட வேண்டும்.!

நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப் பெறப்பட்டு, பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களை செய்து புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம் என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார்.

“நிகழ்நிலை சட்டம் – பிரயோகமும் விளைவுகளும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கோசலை மதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் எக்காரணம் கொண்டும் நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியாது என்பதான இறுக்கமான அரசியலமைப்பு ஏற்பாட்டை தாண்டி குறித்த நிகழ்நிலை காப்பு சட்டத்தினுடைய முறையற்ற தன்மையை கேள்விக்கு உட்படுத்துவதற்கான அரசியலமைப்பு ரீதியான வாய்ப்புகள் இலங்கை உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்படுமா என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டி இருக்கிறது.

அதே நேரம் நிகழ்நிலையில் இடம் பெறக்கூடிய வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக அல்லது அதன் மூலம் பாதிக்கப்படுகின்ற மக்களை பாதுகாக்க வேண்டியதான ஒரு தேவைப்பாடு நிச்சயம் இலங்கையில் இருக்கின்றது, 

இந்த நிகழ்நிலை சார் வன்முறைகள் கட்டுக்கடங்காத தன்மையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையில், பாதிப்புகள் அதிகமாக இடம்பெற்று வருகின்ற ஒரு சூழ்நிலையில் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கான ஒரு பிரத்தியேக சட்டத்தை நாங்கள் உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

அதில் யாருக்கு மாற்று கருத்து இருப்பதற்கான வாய்ப்பில்லை, ஆனால் இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டத்தை உருவாக்குகின்ற போது பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களை செய்து, வெளிநாட்டு நல்ல நடைமுறைகளை ஒப்பிட்டு ஆராய்ந்து நல்ல முறையான சட்டத்தை நிதானமாகவும் அதே நேரம் தெளிவான தன்மையிலும் இலங்கையில் உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

ஆகவே அநாவசியமற்ற அவசரப் போக்கை தவிர்த்து பலதரப்பட்ட கலந்துரையாடல்கள், அது பாதிக்கப்பட்ட மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 

இத்தகைய கலந்துரையாடலின் பின்னணியிலேயே நாங்கள் முறையான நிகழ்நிலை காப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது, எங்களுடைய அரசியல் பரப்பு அல்லது சமூக பரப்பில் எதிர்பார்க்கப்படுவது போன்று நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப் பெறப்பட்டு உரிய முறையில்  தயாரிக்கப்படுவதற்கான ஒரு புதிய வரைவு பாராளுமன்றத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டு, அதனுடைய அரசியலமைப்பு தன்மை உறுதிப்படுத்தப்பட்டு முறையான நடைமுறைகளை பின்பற்றி ஒரு நிகழ்நிலை காப்பு சட்டம் சரியான தன்மையில் உருவாக்கப்படுமாக இருந்தால் இன்றைக்கு எங்களுடைய நாட்டிலே நாங்கள் எதிர்நோக்கி கொண்டிருக்க கூடிய நிகழ்நிலை வன்முறைகளை மிக வினைத்திறனாக அணுகி கட்டுப்படுத்த முடியும் என்பது எங்களுடைய நம்பிக்கை,

அதற்கான வாய்ப்புகள் அரசியல் மற்றும் சட்டப் பரப்பிலே உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பமாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.