தமிழகம் முழுவதும் குற்றச்சம்பவங்களை குறைப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சில இடங்களில் காவல்துறையின் கட்டப்பாட்டை மீறி சில சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையிலான ஒரு சம்பவம் தற்போது சிவகங்கை பகுதியில் நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தில், பெட்ரோல் குண்டு வீசுவது, பட்டாக்கத்திகளால் கேக் வெட்டுவது போன்ற சம்பவங்களை நிகழ்த்தி அதை வீடியோவாக பதிவு செய்து சிலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக “சிவகங்கை பதறும்டா” என்றும்.. இப்படிக்கு “கில்லர் முத்துப்பாண்டி வகையறா” என்ற பெயரில் பதிவுகளில் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர்.
வலைதளப் பார்வையாளர்களை பயமுறுத்தும் வகையிலும் போலீஸாரை அச்சுறுத்தும் வகையிலும் அமைந்துள்ள இந்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இது போன்ற வீடியோக்களை பதிவிடுபவர்களை சைபர் கிரைம் போலீஸார் உடனே கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைவில் நடவடிக்கை எடுத்தால் தான் வரும் காலங்களில் பெரிய அளவிலான குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.