பல்கலைக்கழக மாணவனுக்கு பிணை!

போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் (07) சரீரப் பிணையில் விடுவித்து உத்தரவிட்டது.

வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர் வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடளித்து விட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது குறித்த நபர் போதைப்பொருள் பயன்படுத்தியமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியாகியது.

இந்நிலையில் நேற்று குறித்த மாணவனை கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸார் இன்றையதினம் குறித்த நபரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதவான் குறித்த நபரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

பல்கலைக்கழக மாணவர் என்ற அடிப்படையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குறித்த நபரை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பாது தொடர்ச்சியாக கண்காணிக்கவும் உளவள ஆலோசனைக்கும் சமூக சீர்திருத்த நன்னடத்தை பிரிவுக்கு மல்லாகம் நீதவான் எம்.கே.முகமட் கில்மி உத்தரவிட்டார்.