பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு; 40 பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் தேர்தல் வேட்பாளர்களை குறிவைத்து இன்று புதன்கிழமை இரு வேறு இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதோடு, சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.பாகிஸ்தானின் பொதுத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக இந்தத் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பலுசிஸ்தானின் பிஷினில் ஒரு சுயேச்சை வேட்பாளர் அலுவலகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிஷினின் கானோசாய் பகுதியில் உள்ள சுயேச்சை வேட்பாளர் அஸ்பாண்ட் யார் கான் கக்கரின் (Asfand Yar Khan Kakar) அரசியல் அலுவலகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன்போது காயமடைந்தவர்கள் கானோசாய் தெஹ்சில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பிஷினில் வெடிப்பு நிகழ்ந்தபோது சுயேச்சை வேட்பாளர் அவரது அலுவலகத்திற்குள் இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கிலா சைபுல்லாவில் ( Qila Saifullah) உள்ள ஜமியத் உலமா இஸ்லாம்-எஃப் (JUI-F) வேட்பாளர் மௌலானா வாசியாவின் அலுவலகத்திற்கு வெளியே மற்றொரு தாக்குதலும் இன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதோடு 10 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் மாவட்ட தலைமை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.