திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி மேயர் தீண்டாமை உறுதிமொழி வாசித்தார் அதனைத் தொடர்ந்து கூட்டம் ஆரம்பித்ததும் திருச்சி மாநகராட்சி 63 வது வார்டு திமுக கவுன்சிலர் பொற்கொடி பேசத் தொடங்கினார்.
அப்போது அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை எடுத்து மேயரின் தவாலியிடம் கொடுத்து மேயர் அன்பழகன் இடம் கொடுக்கச் சொன்னார். மேயர் அன்பழகன் அதை வாங்கி திறப்பதற்கு முற்பட்ட அதே நேரம் கவுன்சிலர் பொற்கொடியை பார்த்து எனக்கு மட்டும் ஏன் தனியாக ஸ்வீட் தருகிறீர்கள் என்று கேட்டார். யாரும் எதிர்பாராத திருப்பமாக, பதில் அளித்த கவுன்சிலர் பொற்கொடி எங்கள் வார்டு பகுதி மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து மாமன்றத்தில் முறையிட்டு வருகிறோம்.
எங்கள் குறைகளை இதுவரை நீங்கள் நிறைவேற்றி தரவில்லை, ஆகவே எங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தவே உங்களுக்கு நான் அல்வா தருகிறேன் என்று கூறிவிட்டு மாநகர கூட்ட மன்றத்தை விட்டு வெளியேறினார். கவுன்சிலர் பொற்கொடியின் இந்த பேச்சை கேட்ட மேயர் அன்பழகன் ஸ்வீட் பாக்ஸை திறக்காமல் அப்படியே அதை நகர்த்தி வைத்துவிட்டார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் கே.பாலு, நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு.மதிவாணன் , துர்கா தேவி, பு.ஜெயநிர்மலா, விஜயலட்சுமி கண்ணன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.