புதிய வீடொன்றை நிர்மாணிக்கும் போது சூரியன் உதிக்கும் திசையையும் கருத்திற்கொள்ள வேண்டும் ..!

LED மின்விளக்குகள் இலவசமாக வழங்கினாலு, 2 மாதங்களுக்குள் அந்தத் தொகையை ஈட்ட முடியும் – துறை மேற்பார்வைக் குழு
புதிய வீடு நிர்மாணிக்கும் போது சூரியன் இருக்கும் திசையையும் கருத்திற்கொள்ள வேண்டும் என வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார்மேற்பார்வை குழுவில் கலந்துரையாடப்பட்டது.
வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார்மேற்பார்வை குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் அண்மையில் (08) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
இந்த குழுக் கூட்டத்தில் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டு குழுவின் முன் அதிகார சபையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
அதற்கமைய, புதிய வீடொன்றை நிர்மாணிக்கும் போது அதில் சூரியப் படலங்களை (Solar Panels) பொருத்துவதற்கான இடத்தை திட்டமிடுவது குறித்து குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு வருகைதந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
ஆனால் வாஸ்து சாஸ்திரத்திற்கமைய எமன் இருக்கும் திசை குறித்து மக்கள் கருத்திற்கொண்டாலும், சூரியனின் திசை குறித்து மக்கள் கருத்திற்கொள்வதில்லை என அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.
சூரியப் படலங்களைப் பொருத்தும் இந்த நிலைமை சிக்கலாக மாறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால், இந்நிலைமை குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தி, சூரியப் படலங்களைப் பொருத்துவதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், மின்சாரப் பாவனையைக் குறைப்பதற்காக LED மின்விளக்குகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் தலையீட்டினால் LED மின்விளக்குகளின் விலையை குறைத்து மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த முடிந்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக LED மின்விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் மின்சாரக் கட்டணத்தை குறையும் சதவீதத்தை கருத்தில் கொண்டு LED மின்விளக்குகளை இலவசமாக வழங்கினாலும் 2 மாதங்களுக்குள் அந்தத் தொகையை அரசாங்கத்துக்கு ஈட்டிக்கொள்ள முடியும் என குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு குழு இதன்போது தெரிவித்தது.
அதற்கு மேலதிகமாக, 2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் ஆண்டறிக்கைக்கும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ உதயகாந்த குணதிலக, கௌரவ குணதிலக ராஜபக்ஷ மற்றும் கௌரவ குமாரசிறி ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதிய வீடொன்றை நிர்மாணிக்கும் போது சூரியன் உதிக்கும் திசையையும் கருத்திற்கொள்ள வேண்டும் ..!-oneindia news புதிய வீடொன்றை நிர்மாணிக்கும் போது சூரியன் உதிக்கும் திசையையும் கருத்திற்கொள்ள வேண்டும் ..!-oneindia news