புதுக்கோட்டையில் அதிர்ச்சி.. காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை.. பதற வைக்கும் காரணம்!

புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் பகுதியில் நீண்ட நேரமாக ஒரு கார் ஒரே இடத்தில் நிற்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரை ஆய்வு செய்ததில் அதில் 5 பேர் சடலமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சேலத்தை சேர்ந்த ஐந்து பேரும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன், மகள், மாமியார் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மணிகண்டன், அவரது மனைவி நித்தியா, அவரது தாயார் சரோஜா, மகன் தீரன், மகள் நிஹாரிகா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மணிகண்டன் சேலம் -கிருஷ்ணகிரியில் மணி எண்டெர்பிரைசஸ் என்ற பெயரில் உலோகம் தொடர்பான தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையும் அதிகமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 5 பேரும் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைடுயடுத்து 5 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்தார்களா? அல்லது காருக்குள் விஷ வாயுவை பரவ செய்து தற்கொலை செய்து கொண்டார்களா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும்தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.