பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு 03 வருடங்கள் தேவை

இது அணி சேர்க்கும் தேர்தலல்ல, ஜனாதிபதி தேர்தல் மட்டுமே. அணி சேர்க்கும் தேர்தல் பொதுத் தேர்தலே என்பதை எமது அணி (‘டீம்’) என்ன என கேட்பவர்களுக்கு  கூறிக்கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அணி பற்றி பேசுபவர்கள் இரண்டு அணிகளாக பிளவு பட்டு செயல்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அவை பிளவுபட்டு காணப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ‘நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு மேலும் மூன்று வருடங்கள் அவசியமென்றும் ஆரம்பித்துள்ள பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நாட்டு மக்களின் ஆணை அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தாம் பல்வேறு பதவிகளையும் வகித்தாயிற்று என குறிப்பிட்ட ஜனாதிபதி, இம்முறை தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது நாட்டு மக்களுக்காகவே என்றும் தெரிவித்ததுடன் நாட்டின் வெற்றிக்காக நாட்டு மக்கள் இம்முறை தேர்தலில் அதற்கான ஆணையை தமக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இயலும் ஸ்ரீலங்கா” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று மத்துகம நகரில் நடைபெற்றது.இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

எது எமது  ‘டீம்’ எது என கேள்வி கேட்கின்றனர். இதில் டீம் எதுவும் கிடையாது. இது ஜனாதிபதித் தேர்தல். யார் ஜனாதிபதி என்பதை தெரிவு செய்வதே இப்போதைய தேவை. டீமை தெரிவு செய்வது நான். நாட்டின் அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்துக்கு 225 பேரை தெரிவு செய்ய வேண்டும். அவர்களே பிரதமரை தெரிவு செய்வர். ஊழல் மோசடி இல்லாத சிறந்த வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு திறமையான டீம் எம்மிடமுள்ளது என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

சஜித் பிரேமதாசவின் கொள்கை விளக்க விஞ்ஞாபனம் முழுமையற்றது மட்டுமின்றி அர்த்தமற்றது. ஒன்றுக்கொன்று முரணானது.ஒன்றல்ல இரண்டு டீம்களின் கொள்கைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்று ஒன்பது மாதக் குழந்தை போன்றது.

அதில் ஜீ. எல் பீரிஸும் நாலக கொடஹேவாவும் அதில் இடம்பெறுகின்றனர்.

மற்றது 10 மாதக் குழந்தை போன்றது அதில் ஹர்ஷ டி சில்வாவும் கபீர் ஹாசிமும் உள்ளனர் ஒரே அணியில் இவ்வாறான பிளவுகள் காணப்படுகின்றன.

நாம் நாட்டின் எதிர்காலத்தையும் மக்களுக்கு நிவாரணம் மற்றும் தொழில் வாய்ப்புகள், வரிக் குறைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளித்து எமது  கொள்கை விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளோம்.

கடந்த இரண்டு வருடங்கள் தொடர்பில் சிந்திக்கும்போது. இந்த நாட்டில் தேர்தல் நடத்த முடியுமா என்ற நிலையே காணப்பட்டது. அது மட்டுமன்றி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியுமா? எவ்வாறு முன்னேற்றுவது?என்ற கேள்வியே எழுந்தது.

தற்போது பொருளாதாரம் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டு தேர்தலும் நடத்தப்படுகிறது. நாம் பெரும் சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த வேலைத் திட்டங்களால் இது சாத்தியமாகியுள்ளது.

நான் இந்த நாட்டை தனி ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவே பொறுப்பேற்றேன். எனக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கினர்.

தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பாடசாலைகள் இயங்குகின்றன. வைத்தியசாலைகள் உட்பட அனைத்தும் இயங்குகின்றன. நாடு மிக மோசமான நெருக்கடியில் காணப்பட்டபோது நான் இந்த நாட்டை பொறுப்பேற்றேன்.

டொலரின் பெறுமதி வெகுவாக அதிகரித்திருந்தது. பணவீக்கமும் அதிகரித்திருந்தது. நாம் பொருளாதாரத்தை முன்னேற்றி பொருட்களின் விலைகளை தற்போது குறைக்க முடிந்துள்ளது.

முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை சாத்தியமாக்க மேலும் மூன்று வருடங்கள் அவசியமாகிறது. இந்தப் பயணம் தொடரப்பட வேண்டும். அதற்கு நாட்டு மக்களின் ஆணை மிக முக்கியமாகும்.

இந்த முறை நான் நாட்டு மக்களாகிய உங்களுக்காகவே தேர்தலில் நிற்கின்றேன். உங்கள் எதிர்காலமே எனக்கு முக்கியம்.

2042 ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு எமக்கு சர்வதேசத்தின் மூலம் 10 பில்லியன் டொலர்கள் கிடைக்கும்.சர்வதேச நாணய நிதியம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள், இந்தியா மூன்று பில்லியன் டொலர்கள் அதில் உள்ளடங்குகிறது. நாட்டில் புதிய மாற்றம் மட்டுமன்றி பொருளாதாரத்திலும் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

The post பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு 03 வருடங்கள் தேவை appeared first on Tamilwin news.