மனைவியை தாக்கி கொலை செய்தவருக்கு மரண தண்டனை

தனது மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் கணவருக்கு மரண தண்டனை விதித்து ஊவா மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

35 வயதுடைய மனைவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பதுளை, கென்தகொல்ல பிரதேசத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கணவருக்கு எதிராக பதுளை பொலிஸாரால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான கணவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சிகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து ஊவா மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ்ஸினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.