முதன்முறையாகப்ஜேவிபி தலைவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த இந்தியா.!

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கருதப்படும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைவர் பேச்சுவார்த்தைக்காக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க தலைமையிலான குழுவொன்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இது குறித்து சமூக வலைத்தளமான எக்ஸ் இல் பதிவிட்டுள்ள கலாநிதி ஜெய்சங்கர், அநுர குமார திஸநாயக்கவை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவாதாக கூறியுள்ளார்.

“நமது இருதரப்பு உறவு மற்றும் அதன் மேலும் ஆழமான பரஸ்பர நன்மைகள் பற்றிய ஒரு நல்லதொரு உரையாடல் இடம்பெற்றது.  இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதைகள் குறித்தும் பேசினோம்”.

எனினும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக கொண்டு வரப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் கூறப்பட்டமைக்கு அமைய, தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வு பற்றி ஜே.வி.பி பிரதிநிதிகளுடன் இந்திய தரப்பு விவாதித்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்த திருத்தத்தை ஜே.வி.பி ஆரம்பத்திலிருந்தே எதிர்த்துவருவதோடு, அதை “இந்திய விரிவாக்கம்” எனவும் விமர்சித்தது.

இந்தியா ஆதரவு திருத்தத்தை மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்து எதிர்த்து வருகிறது, குறிப்பாக கடந்த 2023 பெப்ரவரியில், அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துடன் தமது கட்சி எப்போதும் உடன்படவில்லை எனக் கூறினார்.

ஐந்து நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள்  இதன் போது அரசியல் மற்றும் வர்த்தகத்துறையின் தலைவர்களை சந்திக்கவுள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா தமது கட்சியை அழைத்துள்ளமையானது நல்லதொரு இராஜதந்திர நகர்வு என மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கை பிரச்சாரக் குழுவின் உறுப்பினர் சாந்த ஜெயரத்ன தெரிவித்துள்ளதாக உள்ளூர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

“இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத வகையிலான இந்த நடவடிக்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தேசிய மக்கள் சக்தியின் வளர்ந்து வரும் சர்வதேச செல்வாக்கு மற்றும் கேந்திர ரீதியான பார்வையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, குறிப்பாக இரண்டு பொருளாதார சக்தி நாடுகளான சீனா மற்றும் இந்தியா இடையேயான உறவுகளுக்கும் இடையே எப்படி சமப்படுத்திச் செல்கிறோம் என்பதையும் இது காட்டுகிறது.”

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு முன்னதாக, ஒரு முக்கியமான நேரத்தில் அநுரவின் இந்திய வருகை அமைந்துள்ளது.

“இந்த விஜயம் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மாத்திரமல்லாமல், இலங்கையின் அரசியல் நிலப்பரப்பிற்கு தெளிவான சமிக்ஞையையும் அனுப்புகிறது, இது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தேசிய மக்கள் சக்தியை ஒரு முக்கியமான சக்தியாக இந்தியா அங்கீகரிக்கிறது”.

போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வழிவகுத்த அரகலய போராட்டத்திற்கு பின்னர், அநுர குமார திஸநாயக்க பிரபலமடைந்து வருவது அதிகரித்துள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தியை இந்தியா அழைத்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அநுர போட்டியிடக் கூடும் எனக் கூறப்படும் நிலையில், அவருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதான எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைவிட முன்னணியில் உள்ளதாக அந்த கருத்துக்கணிப்புகள் எதிர்வு கூறியுள்ளன.

இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தி குழுவினர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் தலைநகர் அம்தாவாதிற்கும், இடதுசாரிகள் ஆட்சி செய்யும் தென்னிந்திய மாநிலமான கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்திற்கும் பயணிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய பத்திரிகையான ‘தி இந்து’வுக்கு அநுர குமார அளித்த செவ்வியில் “நமது நெருங்கிய அண்டை நாடான இந்தியா ஒரு முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். எனவே, நாம் பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகளை எடுக்கும்போது, அது இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பதைப் பற்றி எப்போதும் அக்கறை காட்டுவோம்” எனக் கூறியிருந்தார்

இந்தியாவுக்கான இந்த விஜயத்தில் அநுர குமார திஸநாயக்கவுடன் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் ஜயசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் பொருளாதார நிபுணர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரும் இணைந்துகொண்டுள்ளனர்.