யாழில் ஒரு மாத காதலியுடன் தியேட்டருக்கு சென்ற காதலனுக்கு ஏற்பட்ட கதி: இரண்டு யுவதிகளை தேடும் பொலிசார்!

திரையரங்கு ஒன்றில் புதுக் காதலியுடன் படம் பார்க்கச்சென்ற இளைஞனிற்கு போதை மருந்து கொடுத்து, தங்கச்சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

திருடப்பட்ட தங்கச்சங்கிலியின் பெறுமதி ரூ.500,000 ஆகும். தங்கச்சங்கிலியை திருடிய காதலியும், நண்பியும் தலைமறைவாகி விட்டனர்.

திரையரங்கில் மயக்கமடைந்து தங்கச்சங்கிலியை பறிகொடுத்த இளைஞன், ஒரு மாதத்திற்கு முன்பாக யுவதியொருவரை வீதியில் சந்தித்த போது, அவரது அழகில் மயங்கியிருந்தார்.

யுவதியின் தொலைபேசி இலக்கத்தை பெற்று ஒரு மாதமாக உறவை வளர்த்து வந்துள்ளார். இருந்தாலும், யுவதி தான் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை சொல்லாமல் கவனமாக மறைத்து வந்திருந்தார்.

காதலியின் விருப்பத்தின்படி சில நாட்களின் முன்னர் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள திரையரங்கு ஒன்றிற்கு படம் பார்க்க சென்றிருந்தனர். காதலியும், அவரது நண்பியான மற்றொரு யுவதியும் வந்திருந்தனர்.

மூவரும் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது யுவதி, பானமொன்றை பருகுமாறு காதலனிடம் கொடுத்துள்ளார். அதை குடித்த காதலன் திரையரங்கிற்குள் மயக்கமடைந்துள்ளார்.

அவர் அணிந்திருந்த ரூ.500,000 பெறுமதியான தங்கச்சங்கிலியை அபகரித்துக் கொண்டு இரண்டு யுவதிகளும் தலைமறைவாகி விட்டனர்.

இந்த சம்பவம் பற்றி அவர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதை தொடர்ந்து, மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.