யாழில். கடத்தலில் ஈடுபட்ட 25 டிப்பர்கள் ஒரேநாளில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் மற்றும் மரங்களை கடத்தி சென்ற 25 டிப்பர் வாகனங்கள் ஒரே நாளில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாணம் – மன்னார் நெடுஞ்சாலை வழியாக தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மணல் மற்றும் மரங்கள் டிப்பர் வாகனங்களில் கடத்தி செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தொடர் முறைப்பாடுகளை அடுத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

அதன் போது , உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி மணல் கடத்தி வந்த 24 டிப்பர் வாகனங்களும் , மரங்களை கடத்தி வந்த ஒரு டிப்பர் வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களை பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் , அதன் சாரதிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ,அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர் .