யாழ் . மத்திய பஸ் நிலையத்துக்கருகில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த தனியார் பஸ் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வினாசித்தம்பி ஜெகதீஸ்வரன் என்ற பஸ் சாரதி மீதே நேற்று முன்தினம் (23) இவ்வாறு வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கருகில் 04 பேர் கொண்ட கும்பலொன்று, பஸ் நிலையத்துக்கு வரும் பெண்களுடன் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளமைய அவதானித்த, இந்த பஸ்ஸின் சாரதி, குறித்த இளைஞர்களை கடுமையாக எச்சரித்து, அங்கிருந்து அப்புறப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்த கும்பலை சேர்ந்தவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்று, பயணிகள் சேவையில் ஈடுபட்டிருந்த பஸ்ஸை வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். கொழும்புத்துறை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பஸ், மணியந்தோட்டம் பகுதியில் வைத்து இவ்வாறு வழிமறிக்கப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த சாரதி யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.