யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு ஓர் பகிரங்க மடல்!

எம்மைப்போல் இன்னொரு ஏழைமகன் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் இனிமேலும் பாதிக்கப்படக் கூடாதென்பதாற்காகவே பல தடவை சிந்தித்து இம்மடலை வரைகிறோம்.

கடந்த 08.11.2024 பி.ப 6.45 மணியளவில் எமது தாயாரை யாழ் போதனா வைத்தியசாலையின் 24 ம் இலக்க விடுதியில் அனுமதித்திருந்தோம்.வீட்டில் விழுந்த அவரை அனுமதித்த வேளையில் அவ்விடுதியில் கடமையில் இருந்தவர் சத்திரசிகிச்சை நிபுணர் Dr.Umashankar .பி.ப 6.45 ற்கு அனுமதித்த போதிலும் Medical students புடை சூழ தன்னை ஒரு ராஜாவாகப் பாவித்து வலம் வந்த வைத்திய நிபுணர் நோயாளியின் அருகில் கூட வராமல் ஆ செலூலைற்றிஸ் என்றவாறு செல்ல குறுக்கிட்ட எனது கணவர் “Dr அம்மா விழுந்துவிட்டா அதுதான் Admit பண்ணினோம் “என்றார்.ஆ அப்ப Xray போடு என்றவாறு விரைந்து விட்டார்.கிட்டத்தட்ட இரவு 9 மணியளவிலே Xray unit க்கு கொண்டு சென்று மீண்டும் விடுதியில் விட்டுச்சென்றோம்.

மறுநாள் அவரை 16 A விடுதிக்கு மாற்றியிருந்தார்கள்.Xray இல் எந்த பிரச்சினையும் இல்லை செலூலைற்றிஸ் கே வைத்தியம் பார்ப்பதாகச் சொன்னார்கள்.இப்படியாக வைத்தியம் பார்த்தவர்கள் 11.11.2024 காலை முதல் அவாருக்கு Urine போகாத காரணத்தினால் இரத்தப்பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தனர்.

மதிய வேளையில் CRP 536 இல் இருப்பதாகக் கூறியிருந்தனர்.மருந்தாளரான மகனுக்கு தாயின் நோயின் தீவிர நிலைமை புரிந்திருந்தது.ஒரேயொரு மகனைப் பெற்ற கணவனையிழந்த அந்த 69 வயதான தாய் நன்றாகவே கதைத்தபடி மகனுடன் இருந்தவர் பி.ப 2 மணியளவில் அவரது அன்புப் பேர்த்தியை காண வேண்டும் என்ற அவாவில் “தம்பி Babyamma வை கூட்டிக்கொண்டு வந்து காட்டுறியோ “என்று கேட்க ஓம் அம்மா என்ற மகன் வீட்டிற்கு வந்து மனைவியையும் 3 பிள்ளைகளையும் அழைத்துச்சென்று பி.ப 3 மணியளவில் விடுதிக்குள் நுழைகின்றார்.தன்னோடு கதைத்திருந்த தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாது போகுமென்று அம்மகன் அறிந்திருக்கவில்லை.

ஆசையாய் அப்பம்மாவைப் பார்க்கச் சென்ற பேரப்பிள்ளைகள் அடக்கத்தில் போய்க்கொண்டிருக்கும் அப்பம்மாவையே பார்க்க முடிந்தது.Ward ன் Emergency bed க்கு மாற்றியிருந்தார்கள்.Pulse rate high ஆகவும் BP very low ஆகவும் இருந்தது.இரவு 7 மணியளவில் Dialysis செய்வதற்காக அழைத்துச் சென்றார்கள்.அது வரை மகனும் மருமகளும் 3 குழந்தைகளும் விடுதியிலேயே வாடியிருந்தோம்.

Dialysis இரவு 11 மணியளவிலேயே முடிவடையும் என்பதால் வீடு திரும்பியிருந்தோம்.இரவு 11.45 மணியளவில் விடுதியிலிருந்த உறவொன்று அழைத்து தாயின் நிலை கவலைக்கிடம் எனக்கூற வைத்தியசாலை விடுதியை 12.11.2024 அதிகாலை 12.10 மணியளவில் சென்றடைய 12.08 மணிக்கு தாயின் உயிர் பிரிந்ததாக கூறிய கடமையிலிருந்த வைத்தியர்கள் இரண்டு மணி நேரத்தின் பின்னர் mortuary இல் சடலத்தை ஒப்படைப்பதாகவும் Consultant inquest போட்டிருப்பதால் பிரேத பரிசோதனையின் பின்னரே சடலத்தை ஒப்படைக்க முடியுமெனக் கூறப்பட்டது.

வீடு திரும்பிய மகன் காலை 7 மணியளவில் மீண்டும் வைத்தியசாலைக்குச் செல்ல விடுதிக்கும் பிணவறைக்குமாக மாறி மாறி அலைக்கழிக்கப்பட இறுதியாக பணிப்பாளரின் அலுவலகத்தை நாட அங்கிருந்தவரின் வழிப்படுத்தலி படிவமொன்றைப் பெற்றவர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் செல்கிறார்.பொலிஸாரின் அறிவுறுத்தலின் பேரில் மகன்,மருமகள், அயலவர் ஒருவர் மற்றும் இறந்தவரின் சகோதரர் ஒருவர் என நான்கு பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

காலை 10 மணி முதல் நால்வரும் மரண விசாரணை அதிகாரியின் அலுவலக வாசலில் காவலிருக்கின்றனர்.நண்பகல் 12.30 அளவில் வருகை தந்த அவரது விசாரணைகள் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைகள் பூர்த்தியடைய பி.ப 1.08 அளவில் கீறிக்கிழித்த உடலத்தை காண்பிக்கிறார்கள்.பின்னர் மூட்டையாக பெற்சீற்றால் சுற்றியவாறு ஒப்படைக்கின்றனர்.அதற்குள் Gate pass ஐ பெற்றுக்கொள்வதற்காக Overseer அலுவலகத்தில் பல நிமிட காத்திருப்பின் பின்னர் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்ட கீறிக்கிழிக்கப்பட்டு தைக்கப்படாத சடலம் அவர்களின் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு பி.ப 2.45 மணியளவிலேயே வீட்டை வந்தடைந்தது.

இவ்வளவு சம்பவத்தையும் குறிப்பிடக் காரணம்

1.நான்கு நாட்கள் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று மரணித்தவருக்கு Inquest போட வேண்டிய அவசியம் என்ன?

2.பதின்நான்கு வருடங்களாக Dr.Peranandharaja வின் மருத்துவ clinic செல்லும் நோயாளிக்கு அவரது Full history உள்ள clinic கொப்பிகளை ஆராய்ந்து அனுமதித்த நாள் முதலே சிகிச்சைகளை ஆரம்பித்திருக்க முடியாதா?

3.அனுமதித்த உடனேயே செலூலைற்றிஸ் எனக் கூறியவர்கள் உடனேயே CRP பார்த்திருந்தார்களா?

4.பார்த்திருப்பின் நான்காவது நாளில் CRP 536 ஆகும் வரை வைத்தியம் பார்க்கவில்லையா?

5.அறுபத்தொன்பது வயது தானே என்ற அலட்சியமா?

6.நான்கு நாட்கள் விடுதியில் இருந்து இறந்தவரின் உடலத்தை கீறிக்கிழிக்கலாமா?

7.கிழித்த உடலத்தை தைக்காமல் கையளிக்கலாமா?

(பெட்டி ,வாகனம் ,மேளம் என்பவற்றுக்காக ரூ.52000 பேசியிருந்த லக்கி ஹவுஸ் தைத்தமைக்காக மேலதிகமாக ரூ.13000 பெற்றிருந்தனர்.)

8.சமூகத்தில் நல்நிலையிலுள்ள எமக்கு இந்நிலையாயின் பாமர மகனொருவரின் நிலை எவ்வாறிருக்கும்?

எமது தாயின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.நாம் உங்கள் நிர்வாகத்தோடு எந்தப் பிரச்சினைக்கும் வரப்போவதில்லை.இருப்பினும் இம் மடலை வரையக் காரணம் நாளை எம்போல் எவரும் பாதிக்கப்படக் கூடாதென்பதற்காகவே!

எமது சுகாதார அமைச்சர் கண்டி போதனா வைத்தியசாலையின் கழிப்பறையையே சுத்தம் செய்து சென்றிருக்கிறார்.தாங்கள் அவ்வாறெல்லாம் இறங்கத் தேவையில்லை.உங்கள் கதிரையைக் காப்பாற்றுவதற்காய் உங்கள் நிர்வாகத்தின் கீழ் நடக்கும் முறைகேடுகளை கண்டும் காணாமல் விடாமல் இலவச மருத்துவத்தை ஏழைகளைக் காப்பதற்காய் பயன்படுத்துங்கள் என்பதே எமது வேண்டுகோள்.

இம்மடலால் ஏற்படவிருக்கும் விளைவுகள் ஏழைகளைப் பாதுகாப்பதற்காய் மாறட்டும்.இலங்கை அரசாங்கத்தின் இலவசக் கல்வியால் பட்டதாரியாய் அரசசேவையில் இருக்கும் ஓர் ஏழையின் குரல் ஏழைகளுக்காய் ஒலிக்கிறது!

நன்றி.
திருமதி.ஷர்மிலா சிவகணேசன் B.A,PGDE,PGD in TESL,M.A
ஆசிரியர்
யா/வட்டு இந்துக் கல்லூரி.