ராகுலுக்கும் இஷானுக்கும் பனிப்போர்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் அறிவுரையை ஏற்காமல் தனியாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் இஷான் கிஷன்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷான். இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாதியில் விலகினார். மனச்சோர்வு ஏற்பட்டதால் குடும்பத்துடன் நேரம் செலவிட விருப்பம் தெரிவித்து தொடரில் இருந்து பாதியில் விலகினார். அதன்பின் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அவர் தேர்வாகவில்லை. இஷான் கிஷன் தேர்வு செய்யாததற்கு அவரின் நன்னடத்தை காரணம் என்று சொல்லப்பட்டது.

ஆனால் ,இதனை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் மறுத்ததுடன், இந்திய அணியில் மீண்டும் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படும் முன்பு உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று தெரிவித்தார். இதனிடையே, திராவிட்டின் கூற்றுக்கு மாறாக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடாமல் குஜராத் மாநிலம் பரோடாவில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான மைதானத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னல் பாண்டியா உடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளதை அடுத்து அதற்கு தயாராகும் பொருட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் இஷான் கிஷன். ரஞ்சி கோப்பை தொடரில் தனது சொந்த மாநிலமான ஜார்கண்ட் அணிக்கு விளையாடாமல், திராவிட்டின் அறிவுரைக்கு மாறாக பாண்டியா சகோதரர்களுடன் இஷான் கிஷன் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது தற்போது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.