வட்ஸ்அப் காதலனால் விடுதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பாடசாலை மாணவி

வட்ஸ்அப் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவியை ஏமாற்றி கண்டி கட்டம்பே பிரதேசத்தில் உள்ள தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் அம்பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்ய கண்டி தலைமையக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

15 வயதான பாடசாலை மாணவி, வட்ஸ்அப் மூலம் அறிமுகமான ஒருவருடன் சில காலமாக காதல் உறவில் ஈடுபட்டிருந்தார். காதலன் அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன்.

இருவரும் நேரில் சந்தித்திருக்கவில்லை.

அம்பலாங்கொட பிரதேசத்தில் வசிப்பவர் எனக் கூறப்படும் காதலன், காதலியை பார்க்க ஆசைப்படுவதாக கூறி, கண்டிக்கு வந்து மாணவியை ஏமாற்றி கட்டம்பே பிரதேசத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்