விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கடந்த வியாழக்கிழமை (21) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.

சம்பவ தினமன்று வேகமாக நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நிலையில் அம்மாணவன் கனரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு ஸ்தலத்தில் உயிரிழந்திருந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் நிந்தவூர் அல் அஸ்ரக் தேசிய பாடசாலையில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும் 18 வயதுடைய பாரூக் முஹம்மது சீத் என அடையாளம் காணப்பட்டார்.

அத்துடன் இவரது ஜனாஸா கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு திடிர் மரண விசாரணை அதிகாரியின் பிரசன்னத்துடன் மரண விசாரணை இடம்பெற்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஜனாஸா கையளிக்கப்பட்டது. இது தவிர ஜனாஸாவின் பாகங்கள் மேலதிக விசாரணைக்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இது தவிர சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (21) மாலை வீதியில் சென்ற மாடு ஒன்றுடன் மோதலை தவிர்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 23 வயது மதிக்கத்தக்க மதன் பவி லக்சான் எனும் இளைஞன் அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதி படு காயமடைந்தார்.

பின்னர் சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்திருந்தார். கிராம சேவகரது மகனான இவ்விளைஞன் வீடு திரும்பும் வழியில் இந்த விபத்த்திற்கு முகம் கொடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சடலத்தை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் பார்வையிட்டு மரண விசாரணை மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். பின்னர் குறித்த பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.