விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரின் கிழக்குப் பகுதியில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது மேலும் இந்த மலையின் அடிவாரத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
சஞ்சீவி மலை விருதுநகர் ராஜபாளையம் நகரப்பகுதியில் அமைந்துள்ள சஞ்சீவி மலை அடிவாரத்தில் பதினெட்டாவது வார்டு வடக்கு மலை அடிபட்டி, ஊலால் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, காமராஜபுரம், எம்ஜிஆர் நகர் 1, எம்ஜிஆர் நகர் 2, உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்
தீ விபத்து
இந்நிலையில் சஞ்சீவி மலையின் வடக்கு பகுதியில் உச்சியில் காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது நெருப்பு பற்றி எரியும் நிலையில் காற்றின் வேகம் காரணமாக அந்த தீயானது பல்வேறு இடங்களில் பரவியது. மலையின் பல்வேறு பகுதிகள் தீயில் கருகி சேதமான நிலையில் அதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்த முயற்சி
அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், ஆனால் காற்றின் வேகத்தின் காரணமாக நெருப்பு கொழுந்து விட்டு எரிவதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. வனத்துறையினர் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
தீயணைப்புத் துறையினர்
இந்நிலையில் அடிவாரத்தில் உள்ள வீடுகளுக்கு நெருப்பு பரவாமல் தீயணைப்புத் துறையினர் தடுத்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதில்லை. மலையில் ஏற்பட்ட தீ விபத்தால் நகர் மக்களிடையே பெரும் பரபரப்பு காணப்பட்ட நிலையில் தீயணைப்பு துறையினர் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
வனத்துறையினர் தீவிர விசாரணை
ஆனால் மலையில் உள்ள பல்வேறு மூலிகைகள் இந்த தீயில் கருகி சேதமானதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் திடீரென காலை நேரத்தில் மலையில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெயில் தாக்கம் அதிகரிப்பு
தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டை இந்த ஆண்டு மிகவும் தீவிரமடைந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது, ஆனால் தற்போது மழையின் அளவு குறைந்ததால் வெயில் வாட்டி வதைக்கின்றது. வெயிலின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.