சென்னை : பிரபல இயக்குநரும்,தயாரிப்பாளருமான அசுதோஷ் கௌரிகர் 10-வது அஜந்தா எல்லோரா (Ajanta Ellora) திரைப்பட விழாவின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ளது திரைப்பட விழாவின் பத்தாவது ஆண்டாகும். இந்த ஆண்டுக்கான திரைப்பட விருது விழா, வரும் 2025 ஜனவரி 15 முதல் 19 வரை சத்ரபதி சாம்பாஜிநகரில் நடைபெறவுள்ளது.
ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட லகான், ஸ்வதேஸ், ஜோதா அக்பர், பானிபட் போன்ற பல முக்கிய படங்களின் இயக்குநரும், தயாரிப்பாளருமான அசுதோஷ் கௌரிகர் இந்த முறை அஜந்தா எல்லோரா திரைப்பட விழாவின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
அசுதோஷ் கௌரிகர் (Gowariker) கவுரவ தலைவராகவும், பிரபல திரைப்பட இயக்குநர் சுனில் சுக்தாங்கர் விழா இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விழாவின் புதிய ஒருங்கிணைப்புக் குழு குறித்த அறிவிப்பை விழாவின் நிறுவனத் தலைவர் நந்த்கிஷோர் காக்லிவால் மற்றும் தலைமை வழிகாட்டி அங்குஷ்ராவ் கடம் ஆகியோர் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து நெகிழ்ச்சியுடன் பேசிய கோவாரிகர் ” ” அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவின் கௌரவத் தலைவராக இருப்பதை நான் ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். மூத்த இயக்குநர் சந்திரகாந்த் குல்கர்னி, விழா இயக்குநர் சுனில் சுக்தாங்கர், ஜெயப்பிரத் தேசாய், தியானேஷ் ஜோட்டிங் மற்றும் அனைத்து கிரியேட்டிவ் இயக்குநர்கள் இணைந்து இந்த சந்தர்ப்பத்தில் ஒரு சிறந்த கலை செயல்முறையை உருவாக்க முடியும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” எனவும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.