அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்றிரவு கைது: கொழும்பில் பெரும் பரபரப்பு

சிறிலங்காவின் முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்றிரவு (சற்றுமுன்) கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய ஹியூமன் இம்மொனோகுளோபிலின் (Human Immunoglobulin) என்ற மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக சி.ஐ.டி.க்கு வருமாறு கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் அதனைத் தவிர்த்து வந்தார். கூட்டங்கள் இருப்பதைக் காரணம் காட்டினார்.

இந்நிலையில் இது தொடர்பில் நீதிமன்றத்தில் கருத்து முன்வைக்கப்பட்டது. அமைச்சர் வேண்டுமென்றே தவிர்த்துவருகின்றார் என சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

அத்துடன், அமைச்சருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.
இதனையடுத்து கெஹலிய ரம்புக்வெல்ல இன்று சிஐடியினரிடம் முன்னிலையானார். ஆவரிடம் சுமார் 10 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதன்பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு பல பொது அமைப்புகளும் போராடிவந்தன .இந்த விவகாரம் காரணமாகவே கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டு, ரமேஷ் பத்திரணவிடம் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.