இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சுமார் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இவற்றில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 2,242 முறைப்பாடுகள், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 472 முறைப்பாடுகள், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 404 முறைப்பாடுகள், சிறுமிகளை வன்கொடுமை செய்தமை தொடர்பான 51 முறைப்பாடுகள், சிறுவர்களை ஆபாசமாக பயன்படுத்தியமை தொடர்பான 06 முறைப்பாடுகளும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக சிறுவர்களை போதைப்பொருள் கடத்தல், தொழிலாளர்களாக பயன்படுத்துதல், குடும்ப வன்முறையால் ஒடுக்குதல், புறக்கணித்தல், கடத்தல், காயப்படுத்துதல், சிறுவர்களை விற்பனை செய்தல், பாடசாலை கல்வி வழங்காமை போன்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் உதய குமார அமரசிங்க தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 7,466 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

எனினும் இந்த முறைப்பாடுகள் 2023 ஆம் ஆண்டு அதிகரித்துள்ளன.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காக தற்போதுள்ள சில சட்டங்களை திருத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.