இலங்கை விமான சேவை விற்பனைக்கு-ஏலம் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்..!

எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விற்பனை செய்வதற்கான ஏலங்கள் நேரடியாக நடத்தப்பட்டு முதலீட்டாளர் தெரிவு செய்யப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று அறிவித்தார்.

அத தெரண 24 தொலைக்காட்சியில் இடம்பெற்ற GET REAL நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

“நாங்கள் ஏலங்களை அழைத்துள்ளோம், மார்ச் 5 ஆம்திகதி காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இதற்காக வரலாம். இது நேரலையில் செய்யப்படும். மதியம் 2.00 மணிக்குள் ஏலங்களைத் திறந்து மதிப்பீடு செய்யலாம். அதை ஆதரிக்க ஒரு தொழில்நுட்பக் குழுவும் உள்ளது. அவர்கள் ஏலங்களை மதிப்பீடு செய்வார்கள்.

இறுதியாக, அது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். குறைந்தபட்சம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கான வலுவான முதலீட்டாளர் வர வேண்டும். அத்துடன் விமான நிறுவனத்தின் 6,000 பணியாளர்களின் வேலைகளை பாதுகாப்பதும் அவசியம் என்றார்.