Home JAFFNA NEWS இளங்குமரன் எம்.பி சட்டத்தை கையில் எடுக்க முடியாது – யாழ். தொழிலதிபர் குற்றச்சாட்டு!

இளங்குமரன் எம்.பி சட்டத்தை கையில் எடுக்க முடியாது – யாழ். தொழிலதிபர் குற்றச்சாட்டு!

250
0

தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உண்மையான விடயங்கள் தெரியாமல் தமது வர்த்தக நிறுவனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகவும் சிற்றி வன்பொருள் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் 65 வருட காலமாக கட்டடப் பொருள் வியாபாரத்தை செய்து வருகிறோம். இவ்வாறான நிலையில் எமது நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் சுண்ணக் கற்களை திருகோணமலைக்கு கொண்டு செல்லும் வழியில் சாவகச்சேரியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வீதியின் குறுக்காக தனது வாகனத்தை நிறுத்தி மறித்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்தும் வகையில் தனது வாகனத்தை எமது வாகனத்துக்கு முன்னால், பிரதான வீதியில் நிறுத்தி சாரதியை மிரட்டி வாகன திறப்பை வாங்கியமை சட்டத்துக்கு விரோதமான செயற்பாடு.

1992 ஆம் ஆண்டு 33 இலக்க சட்டத்தின் 28 (1)( 2) பிரிவுகளின் பிரகாரம் எமது வாகனம் சுண்ணக் கற்களை எடுத்துச் சென்றது. முதலாவது பிரிவானது கனியவளங்களை அகழ்வதற்கான அனுமதி, எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதிப்பத்திரம் என்பவற்றை பற்றி கூறுகிறது. அதன் பிரகாரம் கல் ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

கல் உடைக்கும் ஆலைகள் தமது வியாபார நிலையத்தை பதிவு செய்துள்ளார்கள். மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதி பெற்றுள்ளார்கள். அதுமட்டுமல்லாது கனியவளத் திணைக்களத்தில் அனுமதி பெற்றுள்ளார்கள்.

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பிலிருந்து ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு சகல அனுமதிகளும் பெற்றவர்களிடமிருந்து நாம் கல்லை மட்டும் வாங்குகிறோம். நாம் கிடங்கு கிண்டுவதோ அல்லது கல்லை உடைப்பவர்களோ அல்ல.

முறைப்படி அனுமதி பெற்றவர்களிடமிருந்து பணம் கொடுத்து அவர்களின் கல்லை வாங்கி திருகோணமலைக்கு கொண்டு செல்கிறோம். அதில் நாமும் சிறிய இலாபம் அடைவதோடு கல்லுடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் கல் ஆலைகளை நம்பி தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தையும் நாம் பாதுகாத்து வருகிறோம்.

இலங்கைச் சட்டத்துக்கு உட்பட்டு எமது வியாபார நடவடிக்கைகள் அன்றிலிருந்து இன்றுவரை இடம்பெற்று வரும் நிலையில் இதை அறியாத சிலரின் தூண்டுதலின் பேரில் எமது நிறுவனத்தையும் எமது வியாபாரத்தையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் இளங்குமரன் எம்.பி செயல்பட்டிருக்கிறார்.

பிரிவு இரண்டின் பிரகாரம் அரை கனியங்களை எடுத்து செல்வதற்கான அனுமதி தேவையில்லை. இதை அறியாத இளங்குமரன் எம்.பி எமது வாகனத்தை மறித்து கற்களுக்கு மேல் போடப்பட்டிருந்த பாதுகாப்பு உறையினை கிழித்து சட்டத்தை தன் கையில் எடுத்துள்ளார்.

ஏற்கனவே வவுனியா பொலிஸார் எமது வாகனத்தை மறித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்றமானது சட்டத்துக்கு உட்பட்டு வர்த்தக நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவித்து எமது வாகனத்தை விடுவித்தது.

அது மட்டுமல்லாது கெப்பெற்றிக்கொல்லாவை நீதிமன்றமும் சட்டத்துக்கு உட்பட்டு எமது வியாபார நடவடிக்கைகள் இடம் பெறுவதாக தீர்ப்பு வழங்கியது .

வவுனியா நீதிமன்றம் மற்றும் கெப்பற்றிக்கொல்லாவ நீதிமன்றத்தில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கில், சட்டத்துக்குட்பட்டு சுண்ணக்கல் எடுத்துச் செல்லப்படுவதாக கௌரவ நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு மாகாணங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு எவ்வாறு கருங்கல்லு சல்லி மற்றும் தூள் எடுத்து வரப்படுகிறதோ அதே நடைமுறை சுண்ணக்கல்லுக்கு இருக்கிறது.

அரசாங்கம் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறுகின்ற நிலையில், விவசாயம் மேற்கொள்வதற்காக இரண்டு அடி ஆழம்வரை கல்லு தோண்டப்பட முடியும்.

ஆனால் இளங்குமரன் எம்.பி தென்மராட்சியில் உள்ள பழைய கிடங்கு ஒன்றினை காட்டி, நாம் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இருந்து எடுத்துச் சென்ற சுண்ணக் கல்லுக்கு விளக்கம் கொடுக்கிறார். யாரோ 4 பேர் வழங்கிய தகவலை பொதுமக்கள் வழங்கிய தகவலாக தெரிவித்து ஊடகங்களில் தவறான செய்தியை வழங்கியுள்ளார்.

எமது நிறுவனத்தை நம்பி 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அதேபோல் கல் உடைக்கும் ஆலைகளை நம்பி பரம்பரை பரம்பரையாக கல்லுடைக்கும் தொழிலை மேற்கொள்ளும் 300க்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரத்துக்கு எம்.பி பதில் கூறுவாரா?

அவரின் செயற்பாடு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் வழங்கிய ஊடக செய்திகள் தொடர்பில் காங்கேசன்துறையில் அமைந்துள்ள கணணி குற்றப்பிரிவுக்கு முறைப்பாடு வழங்க உள்ளேன்.

சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எமது வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் அதனை தடுத்து தென் இலங்கையைச் சேர்ந்தவர்களை அழைத்துவந்து அவர்களுக்கு தொழில் கொடுக்கும் சதி நடவடிக்கைகள் இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் எழுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் கடற்தொழில் அமைச்சரை சந்திப்பதற்கு சென்றேன். அவர் அங்கு இல்லை எனது ஆதாரங்களை அவரது அலுவலகத்துக்கு சமர்ப்பித்தேன். அதனை ஆராய்ந்த அவரது அலுவலக உத்தியோத்தர் அமைச்சரிடம் குறித்த விடயம் தொடர்பில் கூறினார். அதன்பின்னர் என்னிடம் பேசினார்.

நீங்கள் சட்டத்துக்கு உட்பட்டு செய்வதை செய்யுங்கள் எனக் கூறினார். இது எனக்கு ஆறுதல் அளித்தது. ஆகவே மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ஏமாற்றத்தை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. எனவே தொழில் வழங்குனர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்காமல் செயல்படுமாறு நாடாளுமன்ற உறுப்பினரை கேட்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here