கற்பிட்டி – நுரைச்சோலை, ஆலங்குடா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து போதைப் பொருளுடன் இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஏழு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் இளம் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலங்குடா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் வீடொன்றில் இளைஞர்கள் குழுவொன்று போதைப் பொருள் பாவிப்பதாக நுரைச்சோலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலின் அடிப்படையில் அந்த வீட்டை சுற்றிவளைத்த நுரைச்சோலை பொலிஸார், அங்கு தங்கியிருந்த ஏழு பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஏழு பேரில் ஆறு பேர் நுரைச்சோலை மற்றும் ஆலங்குடா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் ஐஸ் போதைப் பொருள் பாவித்தமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இளம் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் சோதனையிட்ட போது 1 கிராம் 200 மில்லி கிராம் கஞ்சா இருந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
நுரைச்சோலை பொலிஸ் நிலையை பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எல்.பஷ்பநாதன் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.