உரிமை மறுப்பை ஏற்றுவாழ இயலாது –  குரலற்றவர்களின் குரல் அமைப்பு.!

எமது நாட்டில், கடநத 76ஆண்டுகளாக மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு ‘தேசிய சுதந்திர தினம்’ என்ற பெயரில் ஒரு கோலாகல கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதற்கொப்ப, 2024ஆம் ஆண்டுக்கான சம்பிரதாய சுதந்திர தினம் கறுப்பும் வெள்ளையுமாக கடைப்பிடிக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளை மறுக்கின்ற தினமாக கடந்து போயிருக்கிறது என குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் இன்று (9) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

நாட்டின் தேசிய சுதந்திர நாளன்று தமிழர் தாயக பிரதேசத்தில் ‘சுதந்திரத்தின் சொல்லர்த்தத்தை’ ஜனநாயகப் பண்புடன் பொதுவெளிப்படுத்த முயற்சித்த பல்கலைக்கழக மாணவர்கள் மீதும், மக்கள் பிரதிநிதிகள் மீதும் அரசதிகாரத்தை ஏவி விட்டு அடக்குமுறையை பிரயோகித்துள்ளமையானது, இலங்கை ஒரு ‘ஜனநாயக’ நாடென்ற வகையில் அவமானகரமான செயலாகும். 

நாட்டின் குடிமக்கள், சமத்துவமான பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் வாழ்வுரிமையை அடிப்படையாகக் கொண்டு தத்தமது மதம்,மொழி, கலாசாரங்களை பிறரது தலையீடுகள் எதுவுமின்றி விடுதலை பெற்று உரிமையோடு அனுபவித்து வாழத்தக்க சூழலே மெய்ப்பொருள் மிகுந்த சுதந்திரமாகும்.

இவ்வாறிருக்க, சுதந்திரம் என்கின்ற சொல்லாடலைக் கூட தமிழர்கள் உச்சரித்துவிடக் கூடாதென்று கங்கணம் கட்டிச் செயற்படுகின்ற இலங்கை அரசானது, இந்த மக்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்துக்கொண்டும், இன அடையாளங்களை திரிபுபடுத்திக்கொண்டும், இளைஞர்களை சிறை வைத்துக்கொண்டும் எவ்வாறு தமிழர் தாயகத்தில் சுதந்திரத்தைப் பற்றி பேசமுடியும்? 

அடிமைத்தன ஒடுக்குமுறை மோகத்தை தணியவிடாத அரசுகள், பேரினவாத பின்னணிகொண்ட எண்ணங்களுடன் அரச இயந்திரங்களின் அதிகாரங்களை கூர்மைப்படுத்தி பூர்வீக தேசிய இனமான தமிழர்கள் மீது தொடர்ந்தேர்ச்சியாக உரிமை மறுப்புகளை கட்டவிழ்த்து வருவதை எவ்விதத்திலும் ஏற்றுவாழ இயலாதென்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

அனைவருக்குமான சம உரிமை, சம அந்தஸ்து போன்றவற்றை வலியுறுத்தும் நேர் சமத்துவமும் சுதந்திரமும் நாணயத்தின் இரு பக்கங்களாகும். ஒரே சமுதாயத்தில் வாழ்கின்ற மனிதர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் இனம், மதம், மொழி போன்றவற்றை அடிப்படையாக வைத்து எவ்வகையிலும் மறுத்தொதுக்க முடியாது என்பதை சமத்துவம் சுட்டிக்காட்டுகின்றது. 

எந்தவொரு சமூகமும் மற்றொரு சமூகத்திற்கு அடிதொழுது வாழவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை என்பதை சமத்துவமான தேசிய சுதந்திரம் வலியுறுத்தி நிற்கின்றபோது, தேசிய சுதந்திர உணர்வானது தன்முனைப்புற்று சுதந்திர போருக்கான ஏதுக்களை உருவாக்க தலைப்படுகின்றது. எமது நாடு உட்பட, வரலாற்றில் அநேகமான விடுதலைப் போராட்டங்கள் சமத்துவத்தை நிலைநாட்டவே முகிழ்ந்தவை என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். 

எனவே, அரசாங்கங்களும் அரச இயந்திரங்களும் இனங்களுக்கிடையில் பிரிவினை மனப்பாங்கை ஊக்குவிக்கும் பாரபட்சங்களை புறமொதுக்கி சமத்துவ சிந்தையுடன் செயலாற்றுவதன் ஊடாகவே ஒருமித்த மக்களாக நாட்டை முன்நோக்கி கொண்டுசென்று உண்மையான சுதந்திரத்தை அர்த்தப்படுத்த முடியும் என்பதை, ஒரு மனிதநேய சிவில் அமைப்பாக நாம் குறிப்பிட விரும்புகின்றோம்- என்றுள்ளது.