உல்லாசத்திற்கு இடையூறு!! இரண்டு குழந்தைகளை கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை!

தொடர்மாடி குடியிருப்பிலிருந்து ஜன்னல் வழியாக இரண்டு குழந்தைகளை கீழே எறிந்து கொன்ற சீன தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிய குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கும் எதிர்பார்ப்பில், குழந்தைகளை ஜன்னல் வழியாக வீசி எறிந்த குற்றத்திற்கு ஷாங் போ (Zhang Bo) மற்றும் அவரது காதலி யே செங்சென் (Ye Chengchen) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சீனா உச்ச நீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை அங்கீகரித்து, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மரண ஊசி மூலம் தண்டிக்கப்பட்டதாக China Daily தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், ஷாங் தனது இரண்டு குழந்தைகளை 15 ஆவது மாடியில் இருந்து ஜன்னலுக்கு வௌியே வீசியதற்காகவும் யே செங்சென் தனது காதலனை குழந்தைகளைக் கொல்லும்படி தூண்டிய குற்றத்திற்காகவும் மரண தண்டனைக்கு உள்ளாகினர்.

ஷாங்கிற்கு தனது முன்னாள் மனைவி மூலம் இரண்டு வயது பெண் குழந்தையும் ஒரு வயது ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், அக்குழந்தைகள் தமக்கு இடையூறாக இருப்பதாகக் கருதிய யே செங்சென், அவர்களை விட்டு வரும்படி ஷாங்கை வற்புறுத்தியுள்ளார்.

தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து ஷாங், யே செங்சென்னுடனான உறவை ஆரம்பித்ததாக New York Post தெரிவித்துள்ளது.

ஷாங் தனது முன்னாள் மனைவி சென் மெய்லினை (Chen Meilin) 2020 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து, Ye Chengchen குழந்தைகளை விட்டுவிட்டு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

குழந்தைகளை தூக்கி எறிந்த பின்னர் ஷாங் பெரும் துன்பத்திற்கு ஆளானதையும் தலையில் சுவரை மோதி அழுவதையும் சீன ஊடகங்களில் வௌிவந்த காணொளியில் காண முடிந்தது.

எனினும், தனது பிள்ளைகள் கீழே வீழ்ந்த போது, தான் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் மாடியின் கீழ் தளத்தில் இருப்பவர்களின் சத்தத்தை கேட்டு கண் விழித்து பார்த்ததாகவும் ஷாங் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தனது குழந்தைகளுக்கு நேர்ந்த கதியைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாக அக்குழந்தைகளின் தாயான சென் மெய்லின் குறிப்பிட்டுள்ளார்.

ஷாங் மற்றும் யே செய்த குற்றச்செயல் சீனாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், அவர்களுக்கு கடந்த புதன் கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சீன சமூக ஊடகமான Weibo-வில் வௌியான செய்தி 200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.