ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த 20 பேர், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று விட்டு வேனில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். இவர்கள் வந்த வேன் இன்று அதிகாரை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் சென்னை திருச்சி ஜிஎஸ்டி சாலையில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்தில் காயமடைந்த 14 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காலையிலேயே நிகழ்ந்த இந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மூடுந்து சாலையோர மரத்தில் மோதியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்; 14 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களுக்கு உயரிய மருத்துவம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாலை நேரத்தில் ஓட்டுனருக்கு ஏற்பட்ட உறக்கம் தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதிகாலை பயணம் மிகவும் ஆபத்தானது என்பதால் பொதுமக்கள் மகிழுந்து, மூடுந்து போன்றவற்றில் இரவு 12 மணிக்கு மேல் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத தருணங்களில் தொடர்வண்டி, பேருந்து ஆகியவற்றில் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.