கம்பியில் சிக்கி, தப்பிக்க முடியாமல் பலமணிநேரம் தவித்த சிறுத்தை

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை லக்கம் தோட்டத்தின் சிறுத்தையொன்று வீட்டுத்தோட்ட பகுதியில் கம்பியில் சிக்கி, தப்பிக்க முடியாமல் பலமணிநேரம் தவித்து வந்த சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி சிறுத்தை சிக்கியிருப்பதை அறிந்த அப்பகுதியினர் அது தொடர்பில் இன்று (01) காலை தோட்ட அதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளார். பின்னர் அதிகாரி மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார்.

அதன்பின்னர் பொலிஸார் ஊடாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தோட்ட மக்களும் குவிந்தனர்.

மிருகங்களிடமிருந்து மரக்கறி தோட்ட, விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே இச்சிறுத்தைப்புலி சிக்கியுள்ளது.

கம்பியில் சிக்கிய சிறுத்தை மரக்கறி தோட்டப்பகுதியில் இறுக, தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொண்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த சிறுத்தையை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும், பின்னர் நீதவானின் உத்தரவின் பேரில் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், கம்பி வலையை போட்ட சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மஸ்கெலியா பொலிஸார், நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.