பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் சிக்கல்களிற்கு உரிய காலஅவகாசம் ஊழியர் சங்கங்களினால் வழங்கப்பட்டும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் சிறிலங்கா அரசாங்கமும் இதுவரை தீர்வு வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உடனடித் தீர்வினை வழங்கவேண்டி நாடு தழுவிய இடம்பெறும் வேலைநிறுத்தத்தில் எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் எதிர்வரும் பெப்ரவரி 28 மற்றும் 29, 2024 ஆம் திகதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகமாக, எங்களின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் முன்னெடுக்கும் இருநாள் வேலைநிறுத்தத்திற்கு மாணவர்கள் நாங்கள் எமது விரிவுரைகளினைத் தவிர்த்து எங்கள் மூத்தவர்களிற்கு தார்மீக மற்றும் முழுமையான ஆதரவுகளினையளிக்கின்றோம்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையில் நாளாந்த வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பால், அடித்தட்டு உழைக்கும் வர்க்கமும் முதற்கொண்டு அனைத்துத் தரப்பினரும் பாரிய நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்நோக்கியுள்ள நிலையில் அவற்றினை ஈடுசெய்வதற்கேற்ற சம்பள அதிகரிப்பென்பது அத்தியாவசியமானதொன்றாகும்.
மேலும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், கொரோனாத் தொற்று, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அவ்வப்போது ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளினால் மாணவர்களின் கல்வியாண்டுகள் நிர்ணயித்தவற்றைவிட காலத்தால் அதிகரித்துள்ள நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டேனும், காலதாமதம் ஏதுமின்றி கல்விசார ஊழியர்களைப் பாதிக்கும் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நியாயமான சிக்கல்களிற்கு விரைந்து தீர்வுகான உரிய தரப்புக்கள் முன்வர வலியுறுத்துகின்றோம்.
நன்றி
ஊடக அறிக்கை கீழே
2024.02.27 – Non-Academic Staff Strike