புறக்கோட்டை பீப்பிள்ஸ் பாக்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் வாங்கப்பட்ட குளிர்பானத்தை அருந்தி சுகவீனமடைந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிற்றுண்டிச்சாலையில் குளிர்பானத்திற்கு பதிலாக, தவறுதலாக சுத்தம் செய்யும் திரவம் அடங்கிய போத்தலை அவருக்கு வழங்கியது, பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நோய்வாய்ப்பட்ட இளம் பெண் கடந்த டிசம்பர் 31ஆம் திகதி தனது தாயுடன் சிற்றுண்டிச்சாலைக்கு சென்றுள்ளார்.
அங்கு உணவருந்தி கொண்டிருந்த போது, இளம் பெண் குளிர்பானத்தை கோரியுள்ளார்.
அதனை குடித்த பின்னர் அந்த இளம்பெண் வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளார்.
பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தேசிய தொற்று நோய் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் தற்போது பொது வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக அவரது உறவினர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், டேம் வீதி பொலிஸார், தொடர்புடைய சிற்றுண்டிச்சாலையின் ஊழியர்கள் மூவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அங்கு சிற்றுண்டிச்சாலையின் பிரதான கிளையில் இருந்து காலி குளிர்பான போத்தல்களில் சுத்தம் செய்யும் திரவம் அடைக்கப்பட்டு சிற்றுண்டிச்சாலைக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்தனர்.
குளிர்பானம் மற்றும் சுத்தம் செய்யும் திரவத்தையும் ஊழியர்களால் அடையாளம் காண முடியவில்லை என்றும், இதனால், ஒரு ஊழியர் தவறுதலாக அந்த இளம் பெண்ணுக்கு குளிர்பானத்திற்கு பதிலாக சுத்தம் செய்யும் திரவம் அடங்கிய போத்தலை கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர், அந்த சிற்றுண்டிச்சாலையில் இதேபோன்ற சுத்தம் செய்யும் திரவம் அடங்கிய பல போத்தல்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை டேம் வீதி பொலிஸார் மற்றும் கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் முன்னெடுத்துள்ளது