இலங்கையின் ஜனாதிபதியாக அனுர குமார திஸநாயக்க தெரிவாகி 100 நாட்களுக்கு மேலாகும் நிலையில் பல முக்கியமான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயம் இலங்கை அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் ஏற்பட்டுள்ளது.
’கொள்ளையர்களை விரைவாக பிடிக்க வேண்டும்’ என்ற அழுத்தம் ஜனாதிபதியின் மீது அதிகரித்து வருவதாகவும், தாமதங்களுக்கு அதிகாரிகளை குறை கூறும் போக்கை காணக்கூடியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் குற்றவியல் வழக்குகளில் முழுமையாக விசாரணைகளை நிறைவு செய்யாமல், பொலிசாரால் விசாரணையில் சில பகுதிகளின் அறிக்கைகளை மாத்திரம் அனுப்பப்படும் போது, அப்படியான வழக்குகள் அல்லது குற்றச்சாட்டுக்களை மீண்டும் விசாரிக்கப்போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
உயர்மட்டத்தில் எழும் குற்றசாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் போது, போதிய அரச சட்டத்தரணிகள் இல்லாத காரணத்தால் தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அடுத்து, சட்ட மா அதிபர் திணைக்களம் அப்படியான வழக்குகளின் விசாரணையை முன்னெடுப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளது. அதிலும் முக்கியமாக தீவிரமான பல வழக்குகளில் பொலிஸ் விசாரணைகள் முழுமையாக நிறைவடையாத காரணங்களினால், தம்மால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் வழக்குகளை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை என அந்த திணைக்களம் தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக நாட்டின் சட்ட மா அதிபர் பரிந்த ரணசிங்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஊழலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, நீதிமன்றங்களில் வழக்குகளை பதிவு செய்வதில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தாமதங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
“ஆவணக் கோப்புக்களை சட்ட மா அதிபர் திணைக்களம் ஏழு ஆண்டுகள் வரையில் பூட்டி வைத்திருக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. சில வழக்குகளில் அவை பதிவு செய்யப்பட்ட நாளுக்கு பின்னர் ‘தூசு தட்டாமல்’ அப்படியே வைத்திருந்து காலம்கடந்து நீர்த்துப்போகச் செய்யப்படுகின்றன”, என ஜனாதிபதி அப்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதியை சட்டமா அதிபர் சந்திக்கும் போது, பல உயர்மட்ட குற்றவியல் வழக்குகளில் தமது திணைக்களம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறாது.
வழக்கு விசாரணைகள் தாமதமாவதில் பொலிசாரில் வகிபாகம் குறித்து தொடர்ச்சியாக பல ஆண்டுகளாகவே கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏழு வழக்குகளின் விசாரணைகளை விரைவில் நிறைவுக்கு கொண்டுவருமாறு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அப்போதைய பதில் பொலிஸ் மாஅதிபாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதில் பிணைமுறி பத்திர ஊழல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஆகியவையும் உள்ளடங்கும்.
இதேவேளை, வழக்குகளில் விசாரணைகளை நிறைவு செய்யாமல், பொலிசார் தமது திணைக்களத்திற்கு “உண்மைகளை” மாத்திரம் வழங்கி வழக்குகளை பதிவு செய்யுமாறு கோர வேண்டாமென சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே அந்த தீர்மானத்தின் அடிப்படையில், வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதாக ஆவணங்களுடன் சான்றளிக்க வேண்டும் எனவும், அத்துடன் முக்கிய பகுதிகள் மற்றும் விசேட நிபுணர்களின் அறிக்கையும் அளிக்கப்பட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் முழுமை பெறாத அறிக்கைகள் மீண்டும் பொலிஸ் தலைமையகத்திற்கு திருப்பி அணுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வழக்குகளில் விசாரணைகள் “தாமதமாகின்றன” என்ற விமர்சனத்திலிருந்து தப்புவதற்காக, பொலிஸ் விசாரணையாளர்கள் முழுமைபெறாத விசாரணை அறிக்கைகளை தமக்கு அனுப்பி நீதிமன்றத்தில் வழக்குகளை பதிவு செய்யும் சூழலை ஏற்படுத்துவதாக சட்ட மா அதிபர் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல வழக்குகளை இப்படியான போக்கை திணைக்களம் அவதானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த காரணத்தினால் தவறுகளை எவ்வாறு திருத்திக்கொள்வது விசாரணையாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டிய நிர்பந்தம் தமது அலுவலகத்திற்கு ஏற்படுவதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவ்வாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டாலும் அவை பின்பற்றப்படுவதில்லை என்பதையும் திணைக்களம் அவதானித்துள்ளதகாவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, சில வழக்குகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பினாலும் அவற்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் பதில் கிடைப்பதில்லை என, பொலிஸ் தரப்பில் கூறப்படுவது குறித்தும் சட்டமா அதிபர் அலுவலகம் கடும் அதிருபதி அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சில வழக்குகளில், முக்கிய குற்றவாளியிடமிருந்து வாக்குமூலத்தை கூட பெறாமல், பொலிசார் தமது விசாரணை அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் தீர்மானம் குறித்து தான் அறியவில்லை என்றாலும், அது குறித்து ஆராய்ந்த பின்னர் பதிலளிப்பதாக பொலிஸ் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாக கே.பி. மனதுங்க தெரிவித்துள்ளார்.