சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில், தற்போது மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி, கிண்டி, நந்தனம், தி.நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை, செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
இதனிடையே, மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட ஆந்திரா – தென் ஒடிசா கடலோர பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
7 நாட்களுக்கு மிதமான மழை
இதனால், தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
7 மாவட்டங்களில் கனமழை
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வெப்பநிலை
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (இன்றும் நாளையும்) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2″- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை நிலவரம் :
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.