தட்டித் தூக்கிய ரூபினா பிரான்சிஸ்… பாரிஸில் பதக்கத்தை அள்ளும் இந்தியா!

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் 7-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தொடர்ந்து நடந்த இறுதிப் போட்டியில், 211.1 புள்ளிகள் பெற்று பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்று அசத்தினார். இது பாராலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியாவின் ஐந்தாவது பதக்கமாகும்.

பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை பெற்றுள்ளது.