நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக சுகாதார ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (12) மதிய நேர உணவு இடைவேளையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார சேவையில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக இன்றையதினம் மதிய நேர உணவு வேளையில் சுமார் ஒருமணி நேரம் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் 72 தொழிற் சங்கங்களில் அங்கம் வகிக்கும் சுகாதார சேவை ஊழியர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் DAT கொடுப்பனவான 35 ஆயிரத்தை எமக்கும் தாருங்கள் என கேட்க்கவில்லை.
மாறாக சுகாதார சேவையை முன்னெடுப்பவர்களின் சேவை, பதவி மற்றும் தகுதிகளுக்கு ஏற்றவாறு மேலதிக கொடுப்பனவை வழங்க அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழியுறுத்தி இந்த ஆர்பாட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.
பகல் 01 மணி முதல் 02 மணிவரை முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது கோரிக்கைகளை வாசகங்களாக எழுதி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அத்துடன் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன இந்த மேலதிக கொடுப்பனவு கோரிக்கை விடயத்தை அரசு இழுத்தடிப்பு செய்து வருவதாக அரசுக்கும், சுகாதார அமைச்சுக்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோஷமிட்டு குற்றம் சுமத்தினர்.
அதேநேரத்தில் இந்த மேலதிக கொடுப்பனவு கோரிக்கையை மேலும் ஒருமுறை முன் வைத்து நாடலாவிய ரீதியில் மதிய உணவு வேளையில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார சேவை ஊழியர்கள் வீதிக்கு இறங்கி தமது உரிமையை வழியுறுத்தி போராடுவதாகவும், இனிமேலும் கால இழுத்தடிப்பு காட்டாது அரசு உரிய தீர்வை வழங்க வேண்டும். எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் உருக்கமாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.