‘பல வருடத்திற்குப் பின் ரசித்த திரைப்படம்’… ‘லப்பர் பந்து’ படத்தை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்!

கிரிக்கெட்டை கதைக்களமாக வைத்து வெளியாகியிருக்கும் படம் தான் ‘லப்பர் பந்து’. சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களான அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், லப்பர் பந்து படத்தை வெகுவாக பாராட்டியிருக்கிறார் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின்.

இது தொடர்பான அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இது ஒரு திரைப்படத்தை பற்றியது. திரைப்படம் எடுப்பது என்பது ஒரு சீரியசான விஷயம். அதில் நிறைய கடின உழைப்பும், கிரியேட்டிவிட்டியும் இருக்கிறது. எந்த ஒரு படமாக இருந்தாலும் அதில் இருக்கும் பாசிட்டிவ் அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மிக குறைந்த நெகட்டிவ் விஷயங்ளை மட்டுமே நான் பேசுவேன்.

ஆனால், இன்று பல வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு திரைப்படத்தை ரசித்தேன் என்பதையும், சமீபத்திய ஸ்போர்ட்ஸ் படங்களில் பின்பற்றப்படும் கிளிஷேக்களை தாண்டி ஒரு திரைப்படத்தை எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உருவாக்க முடியும் என்பதற்கான பாடம் இது என்பதையும் என்னால் சொல்லாமல் தவிர்க்க முடியவில்லை.

பொதுவாக கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் தமிழ்ப் படங்களில் அதன் கதைக்கருவை விட்டுவிட்டு அவர்கள் சொல்ல நினைக்கும் விஷயங்களைதான் சொல்வார்கள். ‘லப்பர் பந்து’ படத்தில் அப்படி ஏதும் இல்லாததால் இது எனக்கு ஸ்பெஷலாக தோன்றியது.

மிகவும் நம்பகத்தன்மையுடன், உண்மைக்கு நெருக்கமான இந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட தேவையற்றதாக தெரியவில்லை. இயக்குநரும் ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக ஹரிஷ் கல்யாண், தினேஷ், சஞ்சனா, ஸ்வாசிகா, காளி வெங்கட் மற்றும் பாலா ஆகியோர் மிகச்சிறப்பான ஒரு படத்தை தந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

சென்னையில் அண்மையில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் முதல் இன்னிங்சில் சதம் விளாசி 113 ரன்கள் எடுத்து அசத்தினார். 2வது இன்னிங்சில் பவுலிங்கில் மிரட்டிய அவர் 6 விக்கெட்டை வாரிச் சுருட்டினார். இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான வருகிற 27 ஆம் தேதி முதல் உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.