பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த நபர் தற்கொலை : திருமலையில் பதற்றம்

திருகோணமலை ஜமாலியா பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் அழைத்து செல்லப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (23) மாலை 4.50 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜமாலியா பகுதியில் சில வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த நபர் தற்கொலை : திருமலையில் பதற்றம் - Dinamani news - பொலிஸ் தடுப்பு காவலில்

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் திருகோணமலை – ஜமாலியா, தக்வா நகரை சேர்ந்த சுபைர் முகம்மது ஜுனைட் (வயது26) எனவும் தெரிய வருகின்றது.

ஜமாலியா – கடற்கரைப் பகுதியில் கடந்த 21ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் பணத்தை திருடியதாக குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த இளைஞன் சந்தேகத்தின்பேரில் 22ம் திகதி மாலை திருகோணமலை தலைமையக பொலிசாரினால் அழைத்துச் செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த இளைஞன் நேற்று (23) மாலை தலைமையக பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் இருக்கின்ற மலசல கூடத்திற்குள் தான் அணிந்திருந்த ஆடையைக் கிழித்து கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

எனினும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் எது வித முறைப்பாடுகளும் பொலிஸ் புத்தகத்தில் எழுதப்படாத நிலையில் இன்று மாலை வரை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தடுப்பு காவலில் இருந்த நபர் தற்கொலை : திருமலையில் பதற்றம் - Dinamani news - பொலிஸ் தடுப்பு காவலில்

இதேநேரம் குறித்த இளைஞன் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்ததை கேள்வியுற்ற அவரது உறவினர்கள் குறித்த இளைஞனுக்கு எதிரான முறைப்பாட்டை மேற்கொண்டதாக கருதப்படும் இளைஞனை தாக்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இத்தாக்குதலினால் ஜமாலியா – லவ்லேன் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அலி சப்ரி முஹம்மட் ரிஸ்வான் (40வயது) மற்றும் அலி சப்ரி கடாபி (44வயது) ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

குறித்த மரணம் தொடர்பில் திருகோணமலை – தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருந்த போதிலும் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் தடுப்பு காவலில் வைத்திருந்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு மரணத்திற்காக நீதியை பெற்றுத் தருமாறு உயிரிழந்தவரின் பெற்றோர் உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன் குறித்த இளைஞனின் மரணத்திற்கு நீதிகோரியும் பொலிசாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் டயர்களை எரித்து வீதி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.