போக்குவரத்து அமைச்சருக்கு அல்வா கொடுத்த அம்பாறை அதிகாரிகள்..!

இலங்கை போக்குவரத்துச் சபையின் அம்பாறை டிப்போ அதிகாரிகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசனத் தொடர்பு அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு அல்வா கொடுத்த சம்பவம் ஒன்று தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளது.

பழுதடைந்த பேரூந்துகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட 400 பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கை சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் தலைமையில் நடைபெற்றது.

அதற்காக அம்பாறை டிப்போவின் NB-5430 எனும் பதிவெண் கொண்ட பேரூந்து திருத்தியமைக்கப்பட தெரிவு செய்யப்பட்டிருந்தது.

அதற்கான உதிரிப்பாகங்கள் கொள்வனவுக்கு 4 லட்சத்தி 59 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான தொகையில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.

எனினும் அம்பாறை டிப்போ அதிகாரிகள் NB-5430 எனும் பதிவெண் கொண்ட பேரூந்தை புனரமைப்பதற்குப் பதில் NB-5432 எனும் பதிவெண் கொண்ட பேரூந்தின் இலக்கத் தகட்டை அகற்றி, அதற்கு NB-5430 எனும் பதிவெண் கொண்ட இலக்கத் தகட்டைப் பொருத்தியுள்ளனர்.

குறித்த பேரூந்தையே அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் மூலம் அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அம்பாறை டிப்போ அதிகாரிகள் வெகு சாமர்த்தியமாக ஏமாற்றியுள்ள நிலையில், டிப்போ அருகில் இருக்கும் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் இது தொடர்பில் போக்குவரத்துச் சபைத் தலைவருக்கு அறிவித்துள்ளார்

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ள்ளப்பட்ட விசாரணைகளில் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அம்பாறை டிப்போ ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது