போட்டியில் பரிசு வழங்க கூட ஜாதி தேவையா…. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவியின் பெற்றோர் புகார்!

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
கோவை மாவட்டம் சூலூர் ராசிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் இந்திரா காந்தி, இவருடைய மகள் ராசிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு ராசிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போட்டிகள் நடத்தப்பட்டது.
பேச்சுப் போட்டி

அந்த போட்டியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் தனது மகள் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக பெயர் கொடுத்த நிலையில் மகளைத் தவிர ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த யாரும் பேச்சு போட்டியில் கலந்து கொள்ளவில்லை, ஆனால் சுதந்திர தினத்தன்று நடத்த வேண்டிய போட்டியானது முன்னதாகவே நடத்தப்பட்டதாகவும் பேச்சு போட்டியில் தனது மகள் ஒருவர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் தலைமையாசிரியர் மகளின் ஜாதியை காரணம் காட்டி பேச்சு போட்டியில் பங்கேற்காத வேறு மாணவிக்கு முதல் பரிசை வழங்கியுள்ளார்.

தலைமை ஆசிரியர் மீது புகார்

தனது மகளுக்கு இரண்டாவது பரிசையும் வழங்கி உள்ளதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். மேலும் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து கேட்ட பொழுது தன்னையும் தன் மகளையும் இழிவுபடுத்தி மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் இந்திரா காந்தி தெரிவித்தார்.
மாணவியின் பெற்றோர் கோரிக்கை

ஜாதியின் அடிப்படையில் பரிசு வழங்கியது வேதனை அளித்துள்ளது. தலைமையாசிரியர் நிர்மலா ஆரோக்கிய மேரி மற்றும் ஆசிரியர் சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மாணவியின் பெற்றோர் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

விசாரணை

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். அவருடைய செல்போனை தொடர்பு கொள்ள முடியாததால் இது குறித்து விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளியில் ஜாதியை காரணம் காட்டி மாணவிக்கு பரிசு வழங்காத சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்